அபிநந்தனைச் சிறைபிடித்த பாகிஸ்தான் அதிகாரி கொலை

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனைச் சிறைபிடித்த பாகிஸ்தான் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.
2019இல் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமானைச் சிறைபிடித்த பாகிஸ்தான்ஈராணுவ அதிகாரியான மேஜர் மொய்ஸ் அபாஸ் ஷா, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார்.
“தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் உளவுத்துறை நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினர், இந்திய ஆதரவு பயங்கரவாதிகள் 11 பேரைக் கொன்றனர். அதே நேரத்தில் இரண்டு பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்,” என்று பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த நடவடிக்கையின்போது இரண்டு பாதுகாப்புப் படையினருடன் சேர்த்து, 11 டிடிபி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது.
புல்வாமா தாக்குதலுக்கு 12 நாள்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலம், பாலகோட்டில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது, அப்போதைய விங் கமாண்டர் அபிநந்தன் இயக்கிய விமானமும் பாகிஸ்தான் போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அபிநந்தன் விமானத்தைவிட்டு வெளியேறியபோது, கட்டுப்பாட்டுக் கோட்டின் மறுபுறத்தில் தரையிறங்கியதால் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். அபிநந்தனைச் சிறைபிடித்த பாகிஸ்தான் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.
