STEM சிறந்ததா STEAM சிறந்ததா?

இலங்கையின் கல்வி முறையில் STEM சிறந்ததா STEAM சிறந்ததா? என்ற கேள்வி கல்விச் சமூகத்தினர் மத்தியில் பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாகும்.

என்னைக் கேட்டால் ஓர் ஆசிரியன் என்ற வகையில், ஸ்டீம் கல்வி முறையே நாட்டின் செழிப்புக்கு வலு உந்து சக்தியாக விளங்கும் என்பேன்.

இலங்கையில் 2023 மார்ச் மாதம் 31 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த STEAM கல்வி இன்னும் எழுந்து ஓடத் தொடங்கவில்லை.

STEMகல்வி:

S: Science
T: Technology
E: Engineering
M: Mathematics

இதற்கமைவாகவே இலங்கையில் கலைத்திட்டம் உருவாக்கப்பட்டு பாட உள்ளடக்க கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆனாலும், இலங்கை எந்த விதத்திலும் உருப்படவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மாறாக, STEM கலைத்திட்ட முறையிலான கல்வியினைப் பெற்ற கல்வி அதிகாரிகள்; மருத்துவர்கள்; பொறியியலாளர்கள்; சட்டத்தரணிகள் போன்றோர் அத்துறையிலே நிபுணர்களாக (Consultant) வந்தனரே தவிர, அதனால், இலங்கைக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.

ஆனால், கடந்த காலங்களில், C.W.W.கன்னங்கர; பேராசிரியர் துரைராஜா போன்றோர் நாடு சார்ந்து பல அபிவிருத்திகளுக்கு ஆலோசனையிட்டு நாட்டினை மேன்மை செய்துள்ளதுடன் நாட்டிற்கு பெருமை சேர்த்தும் உள்ளனர்.

உதாரணமாக: கொழும்பு உலக வர்த்தக மையம் (உருளை வடிவ 35 மாடி கட்டடம்) கட்டடம் கட்டிக்கொண்டிருந்த போது, 30 மாடியை கடந்ததும் அது சரிவு நிலையில் காணப்படத் தொடங்கியது. அந்த நேரம் இலங்கை Engineers உதவி கேட்டு ஓடிய இடம் ஜப்பான்.

அவர்களிடம் இதற்கான ஆலோசனை கேட்ட போது “உங்கள் நாட்டில், Jaffna வில் Professor துரைராஜா என்றொருவர் இருக்கிறார். அவர் இதற்கான ஆலோசனைகளை வழங்குவார்” என்றனர்.

“Soil Theorem” ஐ உருவாக்கியவரும் இவரேதான்.

அந்த உலக வர்த்தக நிலைய மாடிக்கட்டடம் இலகுவாய் சீர் செய்யப்பட்டது. இன்று இலங்கையின் ஓர் அடையாளமாக அது மிளிர்கிறது.

இதேபோல்தான், களனிப்பாலம் ஓவல் சேப்பில் (Oval Shape) (முட்டை வடிவ வளைவு) ஒற்றைத் தூணில் அமைத்து சாதனை படைத்த கல்வியாளன், அவர்.

இப்படியான சாதனைகளும், மெருமைகளும் இன்று இங்கு இல்லையே..!

எமது கல்வித் திட்ட முறைமையில் சரியான போக்கு இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

  • தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் Pass
  • O/L சோதனையில் 9A பெறுபேறு
  • A/L சோதனையில் 3A பெறுபேறு

என சாதனை படைக்கின்ற மாணவர்களுக்குத் தங்கள் உயர் கல்வியால் தமக்கும் தம்முடைய நாட்டிற்கும் என்ன நன்மையினை உண்டாக்கலாம் என்ற சிந்தனை போக்கு அந்தக் கல்வியில் காணப்படுவதில்லை.

பெரும்பாலும், இன்றைய மருத்துவர்கள் பலர் நோயாளிக்கான நோயைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது குறைவு.

நோயாளியிடம் உள்ள அறிகுறிகளைக் கேட்டுவிட்டு, “இந்த மருந்தினைக் கொடுத்து பார்ப்போம்” என்று ஊக அடிப்படையில் வைத்தியம் செய்வதையும் காணமுடிகிறது.

இந்தநிலை “இலங்கையில் மருத்துவம் சாவடைந்துள்ளது” எனும் போக்கினையே காட்டுகிறது.

STEAM கல்வி:

மேற்படி STEM கல்வியில் காணப்பட்ட குறைநிலையினை நிவர்த்தி செய்வதாக அமைவது STEAM கல்வி ஆகும். இதில் Art (கலை) எனும் அம்சம் சேர்க்கப்படுகிறது.

கட்டடக்கலை:

சனத்தொகை பரம்பல் அதிகரிப்புக்கு ஏற்ப கட்டடங்களை எப்படி வடிவமைப்பது என்பது தொடர்பானது.

இங்கு, Engineering; Mathematics; Science; Technology ஆகியவை Art (கலை) கட்டட வடிவமைப்பிற்கு எவ்விதம் உதவுகிறது என்பதை அறியலாம்.

கட்டடக்கலை போலவே,

  • கப்பல்கட்டும் கலை
  • விமானம் அமைக்கும் கலை
  • பாரிய வாகன விபத்துகளைத் தடுக்கும் வீதி
    அமைப்பு முறை

மேம்பாலங்கள்:

சீனாவில் இது பாரிய வளர்ச்சி கண்டுள்ளது.

ஒருதேசத்தினைப்பாதுகாத்தல்:

ஒரு நாடு கடல் வழியால் அல்லது ஆகாய வழியால் தாக்கப்படலாம்.

உதாரணம்: ஒரு நாடு, இன்னொரு நாட்டினையும்; அந்நாட்டு உடைமைகளையும்; அந்நாட்டு மக்களையும் அழிப்பதற்கு கடற்படைக் கப்பலினை பயன்படுத்துவதாக வைப்போம்.

அப்போது, அந்தக் கடற்படைக் கப்பல்;

  • என்ன வேகத்தில் பயணிக்கிறது?
  • எந்தத் திசை நோக்கிப் பயணிக்கிறது?
  • கடலலையின் வேகம் என்ன?
  • புறவிசைகளின் பருமன் என்ன?

என்பவற்றை கணித்து அந்தக் கப்பலைத் தாக்கி அழிக்கக் குண்டுகள் ஏவப்படும்.

இங்கெல்லாம்,

  • Mathematics
  • Science
  • Technology
  • Engineering
  • Art

போன்றவை பயன்படும் விதத்தை உணர்ந்து கொள்ளலாம்.

ஆகவேதான், STEAM கல்வி முறையை அறிமுகம் செய்வது பெரிய வேலை கிடையாது.

அதை, நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வாறு பயன்படுத்தி நாட்டினை அபிவிருத்திப் பாதைக்கு அழைத்துச் செல்லவிருக்கிறோம் என்பதே முக்கியமாகும்.

இன்றைய கல்வித்துறையினர் இவற்றினை கருத்தில் எடுப்பார்களா..?

சின்னராஜா உதயகுமார்
வயாவிளான் மத்திய கல்லூரி,
யாழ்ப்பாணம்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025