விண்வெளிப் பயணத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது

இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது என்று ‘டிராகன்’ விண்கலத்திலிருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்குத் தேர்வான விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயணச் சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் புதன்கிழமை விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இத்திட்டத்தின்கீழ் சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து நாட்டு விண்வெளி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் திபோர் கபு ஆகியோரின் விண்வெளிப் பயணம் இன்று புதன்கிழமை (ஜூன் 25) தொடங்கியது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ உந்துகணை மூலம் பிற்பகல் 12.01 மணிக்கு அவர்கள் புறப்பட்டனர். .
அவர்கள் வியாழக்கிழமை மாலை அனைத்துலக விண்வெளி நிலையத்தை சென்றடைவர். 14 நாள்கள் அங்கேயே தங்கி ஆய்வு நடத்திவிட்டு பூமிக்குத் திரும்புவர்.
இந்நிலையில், ‘ஃபால்கான்’ உந்துகணை விண்ணில் ஏவப்பட்ட 10ஆவது நிமிடத்தில், சுபான்ஷு சுக்லா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
நாட்டு மக்களுக்கு வணக்கம் கூறித் தொடங்கிய தமது உரையில், “41 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் விண்வெளியை அடைந்துவிட்டோம். நாங்கள் பூமியை சுமார் 7.5 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறோம். எனது தோளில் இந்திய மூவர்ணக் கொடி உள்ளது,” என்று அவர் கூறினார்.
இது அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கான எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமன்று எனக் கூறிய சுபான்ஷு சுக்லா, இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்துக்கான புதிய அத்தியாயத்தின் தொடக்கமும்கூட என்று குறிப்பிட்டார்.
“நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தில் ஒன்றாகச் சேர்ந்து பயணம் செய்வோம்,” என்று அவர் கூறினார்.
இந்தியா 1984ஆம் ஆண்டில் விண்வெளி வீரா் ராகேஷ் சர்மாவை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் பிறகு 41 ஆண்டுகளில் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையும் சுபான்ஷு சுக்லாவைச் சேரும்.
தலைவர்கள் வாழ்த்து
இவ்வேளையில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, “கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளியில் இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கியிருக்கிறார். நட்சத்திரங்களை நோக்கிய அவரது பயணத்தினால் நாடு முழுவதும் உற்சாகமும் பெருமையும் அடைகிறது,” என்று கூறியிருக்கிறார்.
திரு சுபான்ஷு சுக்லாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இந்திய விண்வெளி வீரர், குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா அனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
அவர் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகளைத் தன்னுடன் சுமந்து செல்கிறார். அவருக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திரு ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கான பயணத்தைத் தொடங்கியது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமையான தருணம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் மரபை முன்னெடுத்து, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்வதன் மூலம் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் சுபான்ஷு ஊக்கமளிக்கிறார் என்று கூறிய திரு ராகுல் காந்தி, சுபான்ஷு மற்றும் குழுவினர் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் திரும்ப வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
