தமிழர்களின் தனித்துவமான பண்பாடு பாதுகாக்கப்படவேண்டும்

தமிழர்களின் தனித்துவமான பண்பாடு பாதுகாக்கப்படவேண்டும்

தமிழர்களின் தனித்துவமான பண்பாடு பாதுகாக்கப்படவேண்டும் என்று வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் – பழக்கவழக்கங்கள் உள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாம் பாதுகாக்கவேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பிரதேச பண்பாட்டு விழா வேலணை துறையூர் ஐயனார் சனசமூக நிலையத்தில் நாடகக் கலைஞர் அமரர் செல்லையா சிவராசா அரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (24.06.2025) நடைபெற்றது.

வேலணை பிரதேச செயலர் க.சிவகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி நி.லாகினி, ஓய்வுபெற்ற பிரதம செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோரும், கௌரவ விருந்தினராக சரவணை மேற்கு மூத்த கலைஞர் கலாபூஷணம் ம.கந்தையாவும் கலந்துகொண்டனர்.

வேலணை பிரதேச செயலக வளாகத்திலிருந்து கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊர்திப் பவனிகள் ஆரம்பமாகின. அத்துடன் கலாசார நடனங்களும் நடைபெற்றன. மேடை நிகழ்வுகளில், கலைஞர்களுக்கான உதவித் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கௌரவிப்பும் நடைபெற்றது.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், இன்று இளங்கலைஞர்கள் உருவாகுவது அருகி வருகின்றது. எங்கள் பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டுவதுடன் இளங்கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் இவ்வாறான பண்பாட்டு விழாக்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன.

இன்றைய இளைய சமுதாயம் திசைமாறாமல் இருப்பதற்கு அவர்களை கலை நிகழ்வுகளை நோக்கி ஈர்க்கவேண்டிய தேவை இருக்கின்றது. அன்றைய நாட்களில் கிராமங்கள்தோறும் பல்வேறு கலை நிகழ்வுகள், கூத்துக்கள் நடைபெறும். இன்று அவையும் அருகிவிட்டன. இளையோரை ஊக்குவித்து அவற்றை மீண்டும் மிளிரச் செய்யவேண்டும்.

இவ்வாறான பண்பாட்டு விழாக்களை கிராமங்களிலுள்ள அரங்குகளில் வைப்பது மிகச் சிறந்தது. இந்த வேலணை துறையூர் மக்களின் பங்களிப்பும் இந்த ஏற்பாடுகளில் இருந்திருக்கின்றது. அதனால்தான் மிகச் சிறப்பாக இப்படியான விழாவை நடத்தி முடிக்க முடிந்திருக்கின்றது.

அவற்றுக்கு அப்பால் இந்த நிகழ்வில் நேர முகாமைத்துவத்தை சிறப்பாக கடைப்பிடித்த பிரதேச செயலகத்தினரையும் பாராட்டுகின்றேன், என்றார்

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025