செம்மணியிலிருந்து அமைச்சர் ராமலிங்கம் வெளியேற்றம்

செம்மணியிலிருந்து அமைச்சர் ராமலிங்கம் வெளியேற்றம் செய்யப்பட்டார்.
யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இன்று புதன்கிழமை (25) மதியம் ஒரு மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்குச் சென்றனர்.
இதன்பொழுது போராட்டகாரர்களால் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டதுடன் அவரது வாகனத்தின் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விரைவாக அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவ்விடத்தில் காத்திருந்த நிலையில், போராட்டகாரர்கள் அவரையும் சூழ்ந்து கொண்டு அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
மேலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. வி. கே. சிவஞானத்தையும் அங்கிருந்து அகன்று செல்லுமாறு இளைஞர்கள் பலவந்தப்படுத்தினர்.
அணையா விளக்கு போராட்டத்திற்கு அரசாங்கம் ஆதரவு
இந்த நிலையில் அணையா விளக்கு போராட்டத்திற்கு அரசாங்கம் ஆதரவு வழங்குவதாக மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
செம்மணியிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார்..
அப்போது, செம்மணி போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் போராட்டத்திற்கு வலு சேர்க்கவே அங்குச் சென்றதாகவும் அமைச்சர் சொன்னார்.
இப்போது போராட்டம் நடத்தும் இளைஞர்கள் செம்மணி கொலை இடம்பெற்றபோது பிறந்திருக்கவும்மாட்டார்கள் என்றும் அவர்களின் இந்த வன்முறை செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
