கொழும்புவில் கோலாகலமான யோகா தினம்

கொழும்புவில் கோலாகலமான யோகா தினம் அனுட்டிக்கப்பட்டது
சுகாதார அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளுராட்சி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தினால் சிறந்த உத்வேகத்துடன் 11ஆவது சர்வதேச யோகா தினம் 2025 ஜூன் 21ஆம் திகதி கொழும்புவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.
ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற தொனிப்பொருளில் இவ்வருட சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தினை வலுவாக்குவதில் யோகாவின் பிரபஞ்ச ரீதியான தொடர்பினை இத்தொனிப்பொருள் வலியுறுத்துகின்றது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிசாந்த அபேசேன, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஷ்வி சாலி, பாதுகாப்புத்துறை பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பி. அருண ஜெயசேகர, புத்த சாசன, மத, கலாசார அலுவலர்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, ஏனைய சிரேஷ்ட பிரமுகர்கள் சகிதம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.




இந்த நிகழ்ச்சி சங்கைக்குரிய கலாநிதி மைதிபே விமலசார நாயக தேரர் மற்றும் அதி வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் பிரார்த்தனைகளுடன் ஆரம்பமாகியது.
மகா சங்கத்தினர் அமைதி, ஆரோக்கியத்திற்காக தமது நல்லாசிகளை வழங்கி அந்த அமர்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து புத்துணர்ச்சி அளிக்கும் தியான, யோகா நிகழ்வுகள் இலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற யோகா மையங்களின் நிபுணர்களால் வழிநடத்தப்பட்டது.
பல நூற்றுக்கணக்கான யோகா ஆர்வலர்கள் பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமைக்கான தமது உள்ளுணர்வினை வெளிப்படுத்தினர்.
இக்கொண்டாட்டங்களின் அங்கமாக யோகா தொடர்பான பூரணமான அறிவினை வழங்குவதனை இலக்காகக் கொண்டு ஹத யோக பிரதீபிகாவின் சிங்கள மொழிபெயர்ப்பு, யோகா பயிற்சிகள் உள்ளடங்கிய தரவுப்பேழை (Pendrive) ஆகியவை வெளியிட்டு வைக்கப்பட்டன.
கொழும்புவில் நடைபெற்ற பிரதான நிகழ்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டையில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் காரியாலயங்கள், கண்டியில் உள்ள துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவையும் விசேட யோகா நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தன.
இலங்கை முழுவதும் 11ஆவது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்கள் பரந்தளவில் உற்சாகத்துடன் நடைபெற்றதனை இது பிரதிபலிக்கின்றது.
இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப்பிரிவு
