யோகா வயது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது

யோகா வயது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது

யோகா வயது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது அஃது அனைவருக்குமானது என்று இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்..

அனைத்துலக யோகா தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், யோகா இன்று முழு உலகத்தையும் இணைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில், 26 கிலோ மீட்டர் நடைபாதையில் ஏறக்குறைய மூன்று லட்சம் பேர், ஒரே நேரத்தில் யோகா பயிற்சி செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடியும் யோகாசனம் செய்தார்.

“உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக யோகா மாறிவிட்டது.

“ஜூன் 21ஆம் தேதியை அனைத்துலக யோகா தினமாகக் கொண்டாட இந்தியா முன்மொழிந்தபோது, குறுகிய காலத்தில் 175 நாடுகள் அதை ஏற்றுக்கொண்டன.

இன்று உலகில் சில பதற்றங்கள், அமைதியின்மை மற்றும் பல பகுதிகளில் உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகிறது.

“இதுபோன்ற காலங்களில், யோகா நமக்கு அமைதியின் திசையை அளிக்கிறது. யோகா என்பது மனிதகுலம் சுவாசிக்கவும் சமநிலைப்படுத்தவும் மீண்டும் முழுமையடையவும் தேவையான அம்சங்களை வழங்குகிறது,” என்றார் பிரதமர் மோடி.

‘ஒரே பூமிக்கு, ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா’ என்ற கருப்பொருளில், இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளும் மாநிலங்களில் அனைத்துலக யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025