பிரதேச சபைத் தலைவர் திருவுளச் சீட்டு முறையில் தெரிவு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தலைவர் திருவுளச் சீட்டு முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா திருவுளச்சீட்டு முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (20) காலை வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
அப்போது தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசாவும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் யுகந்தனும் முன்மொழியப்பட்டனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசாவுக்கு ஆதரவாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த தலா ஓர் உறுப்பினர் என மொத்தமாக 5 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அத்தோடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் யுகந்தனுக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் என மொத்தமாக 5 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர்.
இதன் மூலம் திருவுளச்சீட்டு முறையில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை லெனின் றஞ்சித் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
13 உறுப்பினர்களைக் கொண்ட ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தலா 3 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-யாழ். நிருபர்
