பன்விலை பிரதேச சபையில் வலுவிழந்த தமிழ் உறுப்பினர்கள்

பன்விலை பிரதேச சபையில் வலுவிழந்த தமிழ் உறுப்பினர்கள்

நீண்டகாலமாக உறுதியான பலத்துடன் திகழ்ந்த கண்டி பன்விலை பிரதேச சபையில் வலுவிழந்த தமிழ் உறுப்பினர்கள் பற்றி கண்டி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அங்குத் தொடர்ச்சியாகத் தமிழ் உறுப்பினர்கள் ஒன்று தலைவராகவோ அல்லது பிரதித் தலைவராகவோ பதவி வகித்து வந்திருக்கிறார்கள்.

எனினும், தலைவர், பிரதித் தலைவர் தெரிவின்போது தமிழ் உறுப்பினர்களைப் புறந்தள்ளி, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்துள்ளனர்.

பன்விலை பிரதேச சபையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதால், கடந்த காலங்களில் அவர்களுக்கென்று தனித்துவமான ஓர் இடம் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த முறை தொடர்ச்சியாக இருந்துவந்த நிர்வாகப் பங்கீடு இழக்கப்பட்டிருப்பதாக பன்விலைப் பகுதி தமிழ் அரசியல் தலைவர்கள் மதிமுரசுவிடம் சுட்டிக்காட்டி னர்.

பிரதேச சபை ஒன்று கூடலில் மேலதிக இரண்டு வாக்குகளால் சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது.

மொத்தமாக ஆறு உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சர்வஜன பலய, பொது ஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிகளில் தலா ஓர் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதன்படி ஒன்பது உறுப்பினர்களோடு ஐக்கிய மக்கள் சக்தி பன்விலை பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றியது.

கடந்த 19 வருடங்களின் பின்னர் முதன் முறையாக தமிழரல்லாதவாறு ஐக்கிய மக்கள் சக்தி பன்விலை பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது.

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவர் வாக்களித்தனர்.

சபையின் தலைவராக ஒன்பது வாக்குகளைப் பெற்று மேலதிக இரு வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தியின் பிஹில்ல கங்கானமகே அனுரஷாந்த தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் பந்துல பண்டார ரட்ணாயக ஏழு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

சபையின் உப தலைவராக பொது பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மஞ்சுள தேசப்பிரிய வீரசிங்க 9 வாக்குகளைப் பெற்று இரண்டு மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

இவரோடு போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த
வி. எஸ். அரியநாயகம் ஏழு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

அந்த வகையில், பன்விலை பிரதேச சபையில் வலுவிழந்த தமிழ் உறுப்பினர்கள் நிர்வாகத் தெரிவில் தோல்வியடைந்தமை மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழ் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

பன்விலை ம. நவநீதன்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025