ஈரானின் அணுவாயுதங்களை முற்றாக அழிப்போம்!

ஈரானின் அணுவாயுதங்களை முற்றாக அழிப்போம்! அந்த வல்லமை எம்மிடம் உண்டு என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு சூளுரைத்துள்ளார்.
ஈரானிய அணுவாயுதங்களை அரைவாசி அழித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள நெட்டன்யாஹு, முழுமையாக ஒழிப்பதே தமது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
ஹீப்று மொழி ஊடகத்திற்கு வழங்கிய அரிதான பேட்டியொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், ஈரானிய ஆன்மிகத் தலைவரைப் படுகொலை செய்வது தமது நோக்கம் அல்லவென்று தெரிவித்திருக்கிறார்.
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், ஆட்சி மாற்றத்தைப் பற்றி முடிவெடுக்க வேண்டியவர்கள் ஈரானிய மக்கள். ஆனால், நாங்கள் ஈரானின் அரசாங்க இலக்குகள், அடையாளங்களையும் அழிப்போம்.

அரச தொலைக்காட்சிக்கு நேர்ந்த கதி தெரிந்தது அல்லவா! அவ்வாறு அனைத்தையும் அழித்தொழிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை அமெரிக்காவின் துணை இல்லாமலேயே – தேவைப்பட்டால் ஒழிய – நாம் முனனெடுப்போம் என்றும் திரு. நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரான் மீது தாக்குதல் நடத்துவது பற்றி இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்க ஜனாதிபதி தீர்மானிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா களம் இறங்குவதற்குப் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு வலுத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
