விபத்தை காணொலியாக பதிவுசெய்த சிறுவனிடம் விசாரணை

விபத்தை காணொலியாக பதிவுசெய்த சிறுவனிடம் விசாரணை நடத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுபற்றிச் சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான காட்சியைக் காணொலியாகப் பதிவு செய்த சிறுவனைப் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன.
17 வயதான ஆர்யன் என்ற அச்சிறுவனுக்கு கைப்பேசியில் காணொளிகள் எடுப்பதில் மிகுந்த விருப்பம் உள்ளது.
ஆர்யன் எடுத்த விமானக் காணொலி விபத்து தொடர்பான விசாரணையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனினும், விமானம் பறப்பதைப் படமெடுக்கத் தொடங்கிய சில நொடிகளில் அது கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகும் பயங்கர காட்சி அச்சிறுவனை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளதாக குடும்பத்தார் கூறுகின்றனர்.
ஆர்யன் தற்போது உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள தன் வீட்டின் மாடியில் நின்றபடி, மேலே பறந்து சென்ற விமானத்தைத் தனது கைப்பேசியில் காணொலியாகப் பதிவு செய்துள்ளார்.
“விமானம் பறப்பதைப் பார்க்க எனக்குப் பிடிக்கும். விமானக் காட்சியை நண்பர்களிடம் காண்பிக்கவே படம்பிடித்தேன்.
ஆனால், அது தீப்பிடித்து வெடித்ததும் பயந்து போன நான், என் சகோதரியிடமும் பிறகு என் தந்தையிடமும் அதைக் காண்பித்தேன்,” என்று தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஆர்யன்.
இவரது தந்தை மகன்பாய் அன்சாரி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் பணியாற்றி வருகிறார்.
அண்மையில்தான், அன்சாரியின் குடும்பம், விமான நிலையம் அருகில் இருக்கும் மூன்று மாடி கொண்ட கட்டடத்தில் குடிபுகுந்தது.
“எங்களைப் பேட்டி காண பலரும் விரும்புகின்றனர். நாள்தோறும் செய்தியாளர்கள் எங்கள் வீட்டைச் சூழ்ந்துகொண்டு ஏதாவது பேசுமாறு கேட்கின்றனர்.
“இந்தச் சம்பவம் என் மகனின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால் அச்சமடைந்துள்ள அவர், கைப்பேசியைப் பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டார்,” என்று கூறியுள்ளார் அன்சாரி.
