ஈரான் அரச தொலைக்காட்சி நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்

தாக்குதலுக்கு உள்ளான ஈரான் அரச தொலைக்காட்சித் தலைமையகம்- படம்: அல்ஜசீரா

ஈரான் அரச தொலைக்காட்சி நிலையத்தின் மீது இஸ்ரேல் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளது.
நேரலை செய்தித் தொகுப்பு நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஈரான் அரச தொலைக்காட்சி நிலையம் – Iranian State Broadcaster- IRIB- இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானது.
தொலைக்காட்சித் தொகுப்பாளர் சஹார் எமாமி நேரலை நிகழ்ச்சியில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துக் கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தபோது குண்டு வீழ்ந்து வெடித்தது.
குண்டுத் தாக்குதலின் சிதைவுகள் கலையகத்தை நோக்கி வருவதையும் தொகுப்பாளினி இறைவா! என்றவாறு எழுந்து செல்வதையும் அல்ஜசீரா தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பியது.
ஈரானின் தொலைக்காட்சியும் வானொலியும் காணாமற்போகும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்திருந்த நிலையில், நேற்றிரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு லெபனானிலும் காசாவிலும் ஊடகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் அல்ஜசீரா சுட்டிக்காட்டியுள்ளது.
