பரஸ்பரம் கை கொடுக்க இதொகா-தேமக இணக்கம்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்குப் பரஸ்பரம் கை கொடுக்க இதொகா-தேமக இணக்கம் கண்டுள்ளன. கட்சிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சில சபைகளுக்கு இணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – இதொகா, தேசிய மக்கள் சக்தி – தேமக கட்சிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இதொகா கூடுதல் உறுப்பினர்களைப் பெற்றும் ஆட்சியமைக்க முடியாமல் திணறும் சபைகளில் தேசிய மக்கள் சக்தி கை கொடுக்கும்.
அதுபோல், தேசிய மக்கள் சக்தி கூடுதல் உறுப்பினர்களைப் பெற்றிருந்தும் ஆட்சியமைக்க முடியாமல் திணறும் சபைகளில் இதொகா கை கொடுக்கும்.
அந்த வகையில், நுவரெலியா மாவட்ட கொட்டகலை பிரதேசபையின் புதிய தவிசாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் இராஜமணி பிரசாத் தெரிவு செய்யப்படுள்ளார்.
பிரதி தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜோசப் யாகுள மேரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று (17 ) நடைபெற்ற கொட்டகலை பிரதேசசபையின் கன்னி அமர்வில் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தவிசாளரும் பிரதி தவிசாளரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
சபை அமர்விற்கு 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பினை நடத்த கோரிக்கை முன்வைத்தனர்.
எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர். இதன்போது அதிக விருப்பு காரணமாக பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதாக ஆணையாளர் அறிவித்தார்.
ஆணையாளரின் அறிவிற்பிற்கு எதிப்பு தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நால்வர் வெளிநடப்புச் செய்தனர்.
12 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்ட போதும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி உறுப்பினர் ஒருவரும் ஜனநாயக தேசிய முன்னணி உறுப்பினர் ஒருவருமாக இருவர் வாக்களிக்காது நடுநிலை வகித்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
இதன் படி 10 மேலதிக வாக்குகளின் மூலம் தவிசாளரும் பிரதி தவிசாளரும் தெரிவு செய்யப்பட்டனர்.
