போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

இஸ்ரேலுடன் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில் பேச்சுவார்த்தைக்குத் தயார் இல்லை என்றும் பேச்சுக்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டாம் என்றும் கட்டார், ஓமான் ஆகிய நாடுகளிடம் ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலுக்குத் தகுந்த பதிலடி கொடுத்த பின்னரே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக ஈரான் தெரிவித்திருப்பதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வவ்ளிக்கிழமை (13) ஈரான் மீது இஸ்ரேல் எதிர்பாராதவிதமாகத் தாக்குதலைத் தொடுத்தது. அதில் உயர் இராணுவ அதிகாரிகள் உயிழந்தனர். அணுவாயுத நிலைகள் சேதமடைந்தன.

அதற்குப் பதிலடியாக நரகதத்தின் நுழைவாயில்கள் திறக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல் விடுத்தது. அதற்கமைய இஸ்ரேல் மீது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலுக்குப் பலத்த சேதமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனினும், இஸ்ரேல் அந்த விபரங்களை மறைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பல கட்டடங்கள் பெரும் சேதமடைந்துள்ளன. அதேநேரம், ஈரானில் எரிபொருள் நிலைகள் மீது இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.

பிந்தியத் தகவலின்படி, போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்திருப்பதால், இரு நாடுகளுக்குமிடையில் மோதல் தீவிரமடைந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டதுடன் இன்று காலையும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், இவ்வாரம் கனடாவில் நடைபெறும் ஜ7 மாநாட்டில் ஈரான், இஸ்ரேல் விவகாரம் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறேனும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் உலகத் தலைவர்கள் ஈடுபட உள்ளனர்.

ஜீவிதன்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025