கொழும்பு மாநகரில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி

கொழும்பு மாநகரில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் ஏழு மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
இன்றைய வாக்கெடுப்பில் மொத்தமாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று (16) நடைபெற்றது.
நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதாக சபையில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
