உயிரிழந்தவர்களின் உடல்களுக்காகக் காத்திருக்கும் உறவினர்கள்

கருப்புப் பெட்டி இன்னமும் ஆய்வு

எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்காகக் காத்திருக்கும் உறவினர்கள் பற்றிய செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரபணு பரிசோதனை செய்து உறுதிப்படுத்தியதன் பின்னர் சடலங்கள் நெருங்கிய உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.

எனினும், சடலங்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தால், உரியவர்களிடம் ஒப்படைப்பதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக அகமதாபாத் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சடலங்கள் தீயில் கருகி உடல் சிதைந்திருப்பதால், பற்களைக் கொண்டு மரபணு சோதனை செய்யும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, விமானத்தின் இறக்கைப் பகுதியிலிருந்து மேலும் சில சடலங்கள் கண்டெக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்காகக் காத்திருக்கும் உறவினர்கள் தம்மைக் காக்க வைப்பது கொலை செய்வதற்குச் சமம் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 274 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த சிலர் உயிரிழந்துவிட்டனர்.

உயிர் தப்பிய ஒரேயொரு பயணியான விஸ்வாஸ்குமார் ரமேஸ் பற்றித் தீவிரமாக ஆய்வுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. இவ்வளவுபேர் உடல் கருகி இறக்கும்போது இவர் எப்படி தப்பினார், என்பதே கேள்வி!

விபத்து பற்றி ஆய்வுசெய்ய பிரிட்டிஷ் குழு இந்தியா வருகை

எயார் இந்தியா விமான விபத்தை ஆய்வுசெய்வதற்காக பிரிட்டிஷ் குழுவொன்று இந்தியா வந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் மேலெழும்ப முடியாதவாறு இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் கோளாறு இருப்பதாகக் கடந்து ஆறு மாதங்களுக்கு முன்னரே புகார் செய்யப்பட்டபோதிலும், அது சீர்செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எனவே, விபத்துபற்றி முழுமையான விசாரணையைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, போயிங் 787-8 விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதை நிறுத்திவைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒரு மாதத்தில் விலகவிருந்த விமானி!

விபத்துக்குள்ளான விமானத்தைச் செலுத்திய விமானி தம் தந்தையைப் பராமரித்துக்கொள்வதற்காக இன்னும் ஒரு மாதத்தில் வேலையைவிட்டு விலக முடிவுசெய்திருந்ததாகத் தெரியவந்துள்ளது.

திருமணமாகாத விமானி சுனில், தம் தொண்ணூறு வயது தந்தையைப் பராமரித்து வந்தார் என்றும் அவருக்காகத் தொழிலைக் கைவிடுவதாகத் தெரிவித்திருந்தார் என்றும் விமானியின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025