அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் டிரம்புக்கு எதிரான போராட்டம்

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் டிரம்புக்கு எதிரான போராட்டம்

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் டிரம்புக்கு எதிரான போராட்டம் விரிவடையும் வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லொஸ் ஏஞ்சலில் நேற்று முதல் போராட்டம் உக்கிரமடைந்துள்ளது. ஆர்ப்பாட்டத்தைதக் கலைப்பதற்காகப் பொலிஸார் இன்று கண்ணீரப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் உருவானது. அதிபர் டிரம்ப் பாதுகாப்புக்காக அனுப்பிருக்கும் படை வீரர்களை வாபஸ் பெறுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி அரச கட்டடங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மத்திய வட்டாரத்திலுள்ள அரச கட்டடங்களுக்கு முன்பாக நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர்.

அரச கட்டடங்களின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்து போர்ப்படை வீரர்கள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றக் கூடாது என்று வலியுறுத்தி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஒரு வார காலமாகப் போராட்டம் நடந்து வருகிறது. சில இடங்களில் வன்முறைகளும் ஏற்பட்டன.

இதனால், அந்தப் பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. போர்ப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இப்போது அவர்களை வெளியேற்றுமாறு போராட்டம் வலுத்துள்ளது.

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் ஜனாதிபதியின் நிர்வாகத்தினரிடமிருந்து அமெரிக்க ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி முக்கிய நகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நியுயோர்க், பிலடெல்பியா, சிக்காகோ, ஹுஸ்டன், லொஸ் ஏஞசல்ஸ் முதலான சிறிய, பெருநகரங்கள் ஆகியவற்றில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிபர் டிரம்ப் தமது 79ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் தறுவாயில், மன்னர்கள் கிடையாது என்ற தொனிப் பொருளில் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.