எயார் இந்தியா விபத்து முழு விபரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 265

எயார் இந்தியா விபத்து முழு விபரம் வெளியாகியுள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின்; அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இலண்டன் நோக்கிப் புறப்பட்ட எயார் இந்தியா ஏஐ171 விமானம், நேற்று (12) பிற்பகல் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 230 பயணிகளும் 10 பணியாளர்களும் இரண்டு விமானிகளுமாக 242 பேர் பயணத்தை ஆரம்பித்தனர். எனினும், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வீழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் ஒரு பயணி மாத்திரம் உயிர் தப்பியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளரது. ரமேஷ் விஸ்வாஸ்குமார் என்ற 38 பயது வாலிபரே உயிர் தப்பியிருக்கிறார். விமானத்தில் பயணித்த 241பேர் உட்பட 265பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் உலகில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்தாக நேற்றைய விபத்து கருதப்படுகிறது.
விமானம் மேலெழும்பிய சுமார் 59 நொடிகளில் அனைத்தும் துவம்சமாகிப்போனது. 32 நொடிகள் மாத்திரமே வான்வெளியில் பறந்த விமானம், அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் மேகானிநகர் குடியிருப்புப் பகுதியில் வீழ்ந்து தீப்பற்றியது.
மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதிக் கட்டடத்தில் பயங்கரமாக மோதிய விமானம், அந்தக் கட்டடத்திற்குள் முழுமையாகப் புதைந்துபோனது. மதிய உணவு வேளை என்பதால், கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்து மாணர்கள் உயிரிழந்து பலர் காயமடைந்ததாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவித்தன. எனினும், பின்னர் பயணிகள் தவிர, 24பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திச் சுருக்கம்
- அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடஙகளில் விமானம் விபத்து.
- 242 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைப்பு
- பிரதமர் நரேந்திரமோடி சம்பவ இடத்திற்கு விஜயம்
- விமானத்தைத் தவறிவிட்ட பெண் உயிர் தப்பினார்.
போயிங் 787-8 என்ற இந்த விமானம் நேராக மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தில் மோதி பெரும் அனர்த்தத்தைச் சந்தித்தது.
விபத்து நடந்த பகுதிக்கு இன்று காலை விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் பார்வையிட்டுள்ளார்.
சனநெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில் விமானம் தாழ்வாகப் பறந்தபோது அது மேலேழுவதற்குச் சிரமப்படுவதாக உணர்ந்த ஒருவர் அந்தக் காட்சியைப் படம் எடுத்துள்ளார்.
விமானத்தில் பயணித்த 169 இந்தியர்கள், 53 பிரித்தானியர்கள், ஏழு போர்த்துக்கீசர்கள், ஒரு கனேடியர் ஆகியோருடன் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூப்பனியும் இறந்தவர்களுள் அடங்குவார்.
ஒருவர் உயிர் தப்பிய அதிசயம்!
இறக்கைப் பகுதி இருக்கையில் அமர்ந்திருந்து உயிர் தப்பிய விஸ்வாஸ்குமார் ரமேஸ் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் தகவல் தருகையில், விபத்து நேர்ந்த பகுதியின் வெப்பநிலை ஆயிரம் பாகை செல்சியஸாகக் காணப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
1,25,000 லீற்றர் எரிபொருளுடன் வெடித்துச் சிதறிய விமானத்தில் சென்றவர்கள் உயிர் தப்புவது சாத்தியமே இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
விபத்து சம்பந்தமாக முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி, சிவில் விமான சேவைகள் அமைச்சர் ராம் மோகன் நாயுடுவைப் பணித்துள்ளார்.
விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்னர் ஆபத்து அழைப்பு (மே டே கோல்) வந்ததாக சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி விமான விபத்துப் பிரிவு முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
முதலாவது விபத்தைப் பதிவுசெய்துள்ள இந்த போயிங் 787 விமானம் 2011ஆம் ஆண்டில் வணிக சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள போயிங் பிரதம நிறைவேற்று அதிகாரி கெலி ஓர்ட்பர்க், விசாரணைக்குத் தொழினுட்பக் குழுவினரை அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகத் தலைவர்கள் இரங்கல்; நேசக்கரம்
சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார் என்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு முடிந்த உதவியைச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். “எதுவும் எம்மால் செய்ய முடியும்! நாம் செய்வோம் “என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி நட்டஈடு தருவதாக டாட்டா நிறுவனம் அறிவிப்பு
விபத்தில் உயிரிழந்த குடும்பங்ளுக்குத் தலா ஒரு கோடி நட்டஈடு வழங்குவதாக எயார் இந்தியா விமான சேவையின் தாய் நிறுவனமான டாட்டா குழுமம் அறிவித்துள்ளது.
காயமடைந்தவர்களின் அனைத்து மருத்துவச் செலவையும் பொறுப்பேற்பதாகவும் சேதமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதியைப் புதிதாக நிர்மாணித்துத் தருவதாகவும் டாட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எயார் இந்தியா விபத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவுகள் பற்றிப் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன. பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்து சென்ற மருத்துவர் ஒருவர் குடும்பம், தொழில்வாய்ப்புக்கெனச் சென்றவர்கள் எனப் பல விடயங்கள் சோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
இந்தியா வந்து பிரியாவிடை கொடுத்துச் சென்ற பிரித்தானியர்கள், உறவுகளைப் பார்க்கச்சென்ற இந்தியர்கள் எனச் சோகக்கதை நீளுகிறது. இதில் வாகன நெரிசலால் தாமதமாகிச் சென்று விமானத்தைத் தவறவிட்ட பெண்ணின் குமுறல் எல்லோரையும் கலங்கச்செய்கிறது.
நிறைவாக, ஒருவர் மட்டும் உயிர் தப்பியது எப்படி? என்ற கேள்விக்கான விடையும் விமானத்திற்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கான பதிலும் இன்னும் கண்டறியப்பட வேண்டிய விடயங்கள்.
மதிமுரசுவுக்காக ஜீவிதன்
