வானொலி நேயர் வாசன் ஜி ராஜாவுக்குப் பிறந்த நாள்

வானொலி நேயர் வாசன் ஜி ராஜாவுக்குப் பிறந்த நாள்

ஐம்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக வானொலி நேயராக இலங்கையிலும் வெளிநாட்டு நேயர்கள் மத்தியிலும் பிரபலமான வானொலி நேயர் வாசன் ஜி ராஜாவுக்குப் பிறந்த நாள் இன்றாகும் (ஜூன் 12).

இரத்தினபுரி-பலாங்கொடை பிரதேசத்தில் பிறந்த ராஜா, தொழில் நிமித்தமாக இரத்தினபுரியில் வசிப்பவர். அங்கேயே வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டதால், நிரந்தரமாகவே இரத்தினபுரியில் வேரூன்றிப் போனார்.

எத்தனையாவது பிறந்த நாள் என்றால் அவர் சொல்லும் பதிலுக்கு நாம் அசந்துபோகும் அளவுக்குத் தன்னைப் பராமரித்துக்கொண்டு என்றும் இளமையுடன் மிளிர்கிறார்.

வானொலிப் பிரியரான அவர், ஐம்பது வருடங்களைக் கடந்து வந்த பாதையை மீட்க வேண்டும் என்பதற்காக ஒரு நிழற்படத் தொகுப்பையே நமக்காகத் தந்திருக்கிறார். அத்தனை நிழற்படங்களும் பசுமையான நினைவுகளைக்கொண்டவை.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள, தமிழ் ஒலிபரப்புகள் அனைத்தையும், அறிவிப்பாளர்கள் கடையை மூடும் வரை, தனது தையல் அலங்காரக் கடையையும் திறந்து வைத்திருப்பார்.

தொழில் தையல் என்றாலும், அவரக்கு மையல் எல்லாம் வானொலி மீதுதான். பெரிய இடத்தில் சம்பந்தம் செய்துகொண்டாலும், அவருக்குத் தமிழ்த் தீனி போடுவதென்னவோ இலங்கை வானொலிதான்.

பேர் வைச்சாலும் வைச்சாரே கலிஸ்ரா லூக்கஸ்!

ஆரம்பகாலத்தில் ராஜாவாக இருந்தவரை, வாசன் ஜி ராஜாவாக மாற்றியவர் இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளர் சகோதரி கலிஸ்ரா லூக்கஸ் என்று எப்போதும் மனத்தைத் திறந்த சொல்வார்.

எல்லா அறிவிப்பாளர்களுக்கும் அவசரத்தில் ஏற்படும் பிசகைப் போல ராஜாவின் பெயரை சற்றுத் தடுமாறி வாசன் ஜி ராஜா என்று வாசித்திருக்கிறார் சகோதரி கலிஸ்ரா!

அடடே! அதுவும் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறதே என்று அந்தக் கணத்திலிருந்து தம் பெயரை வாசன் ஜி ராஜா என்று (வானொலிக்கென்று) வைத்துக்கொண்டார்.

இப்படிப் பலருக்குத் தம் பெயர் தற்செயலாக அமைந்துவிடுவதுண்டு. சிலருக்குச் சில நேரத்தில் பொருந்தும் பெயர்கள் அவர்களுக்கே தெரியாமல் நட்பு வட்டத்தில் மாத்திரம் அறிமுகமாகியிருக்கும்.

ராஜாவுடன் ரோஜாவாக இருக்கும் ஒரு நண்பரை நாங்கள் “பெல்” என்று சங்கேதச் சொல்லால் அழைப்போம். அலைபேசியில் பேசிக்கொண்டால், இன்று பெல்லைக் காணவில்லையா? என்று கேட்டுக்கொள்வோம்.

இது நண்பர் பெல்லுக்குத் தெரியாது. வானொலியில் அறிவிப்புச் செய்யும் (பழகும்) அறிவிப்பாளர் ஒரு நாள் தொலைபேசியில் ஒருவரைப் பேட்டி எடுத்திருக்கிறார். அப்போது மறுமுனையில் இருந்த ஒரு பிரபலம் அருமையான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

உடனே அந்த அறிவிப்பாளர் “அம்மட்ட உடு ” என்றாராம். இந்த விடயம் வௌியில் வந்துவிட்டது. அன்றிலிருந்து அவரைப் பற்றிக் கேட்டால், அம்மட்ட உடு வந்தாரா? என்றுதான் நண்பர்கள் சொல்வார்களாம்.

இந்தக் கதையைப் பின்னாளில் ஒரு சகபாடியிடம் சொன்னேன். விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் அவரைச் சந்தித்தபோது, தாங்கள் சந்திக்கும் அந்திநேர மந்தாரத்தில் ஒருவர் எதற்கோ, அம்மட்ட உடு என்றாராம்!

அன்றிலிருந்து அவருக்கும் அம்மட்ட உடு பெயராகிப் போனதாக அந்தச் சகபாடி சொன்னார். இப்படிப் பல சுவாரஸ்யமான கதைகளைப் பற்றிப் பேசினால், ராஜாவுடன் பொழுது போவதே தெரியாது.

சகபாடி என்று நான் சொன்னது ஒன்றாகப் பணியாற்றும் ஒருவரை. ஒன்றாகப் பணியாற்றும் எல்லோரையும் நண்பர்கள் என்று பலர் நினைத்துக்கொள்கிறார்கள். அதற்காகத்தான் சொன்னேன்!

தனது தொழிலுக்கு யார் கைகொடுத்தார்களோ இல்லையோ, இலங்கை வானொலி உறுதுணையாக இருக்கிறது என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார் வாசன் ஜி ராஜா.

இது தவிரவும் தமிழ்ப் பாடல்கள் பற்றிய வரலாறு, சிங்களப் பாடல்களின் வரலாறு எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறார் ராஜா. கவிஞர் வாலிப வாலியின் சுவாரஸ்யமான கருத்துகள் பலவற்றையும் என்னுடன் பகிர்ந்திருக்கிறார்.

சில நேரங்களில் பழைய பாடல் தொகுப்புகளையும் மிக அழகாகக் சொல்வார். அந்தப் பாடலில் அந்த நடிகை இப்படிச் செய்வார். எம்ஜிஆர் அப்படிச் செய்வார். இசையமைப்பாளர் இவர்தான் என்றெல்லாம் சுவாரஸ்யம் அள்ளும்!

பலாங்கொடையிலிருந்து வேருடன் பிடுங்கப்பட்டு இரத்தினபுரியில் நிரந்தரமாக நடப்பட்டாலும், ஊரை மறக்காதவர் ராஜா! ஒலிபரப்பாளராகத் திகழ்ந்த திரு. சத்தியநாதன் பற்றி அடிக்கடி சிலாகித்துப் பேசுவார் ராஜா.

அதேபோன்று வானொலி ஒலிபரப்பாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அது வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம் என்பார். அறிவிப்பாளர்கள் பற்றி நேயர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் அலாதியானது.

ஆனால், சில வேளைகளில் அந்த அறிவிப்பாளர்கள் நடந்துகொள்ளும் விதம் மனத்தைத் தைக்கும்படியாக இருக்கும் என்று பல நேயர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், வாசன் ஜி ராஜா யாரையும் குறை சொல்லமாட்டார்.

அதற்கு அவர் சேகரித்து வைத்திருக்கும் நிழற்படங்களே சான்று பகரும்.

எதற்காக இந்தப் பதிவு என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆம், தம் வாழ்நாளில் கடந்து வந்த பாதையைப் பலர் பல்வேறு விதமாகப் பதிவுசெய்து வைத்திருககிறார்கள்.

இணையத்தளம், வலைப்பூ என எதுவும் இல்லாத நிலையில், அவரின் நினைவுகளை மதிமுரசுவில் பதிவேற்றுவதன் மூலம் உலகெங்கும் வாழும் அன்பு உள்ளங்கள் அறிந்து மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

இந்தப் பதிவை ஏற்று வெளியிடும் மதிமுரசு ஆசிரியபீடத்தினருக்கு எனது நன்றி. வானொலி நேயர் வாசன் ஜி ராஜாவுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

இஃது – அன்புச் சகோதரன்

மேலும் படங்களுக்கு அல்பத்தைப் பார்க்கவும்

மேலும் சில படங்கள் இங்கே

நன்றி- Thank You!

BALANGODA WALAWWA

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025