மின் கட்டண அதிகரிப்புக்கு சஜித் கடும் எதிர்ப்பு

பராட்டே சட்டம் அமுல்

மின் கட்டண அதிகரிப்புக்கு சஜித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பது மக்கள் ஆணையைக் காட்டிக் கொடுக்கும் செயலாகும். மக்கள் ஆணைக்கு இழைக்கும் துரோகமுமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையும், அரசாங்கமும் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும் செயலாகும். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத போக்காகும். இது இந்நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மின்சாரக் கட்டணத்தை ரூ.9000 இல் இருந்து ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைப்போம் என்றார்.

மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்போம் என்றும் மேடைக்கு மேடை கூறினார்.

பின்னர், பொதுத் தேர்தலில் அக்கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டி 159 ஆசனங்களை தனதாக்கிய சந்தர்ப்பத்திலும் கூட ​​மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறி, ஜனாதிபதியே தான் வெளியிட்ட அறிக்கைகளை பொய்களாக மாற்றும் வகையில், மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க தற்போது இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, இந்த நாட்டின் மின்சார நுகர்வோரின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்துள்ளது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அடுத்த கட்ட தவணையைப் பெறுவதற்காக மின்சாரக் கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை பெற வேண்டுமானால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளது.

திசைகாட்டி தலைமையிலான ஜே.வி.பி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தமொன்றையும் இணக்கப்பாடொன்றையும் எட்டுவோம் என வாக்குறுதியளித்திருந்தது.

என்றாலும் ஆட்சிக்கு வந்தவுடன் தனது ஆணையை மீறியுள்ளதுடன், முந்தைய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை அவ்வாறே முன்கொண்டு செல்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தியும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் இனங்கி செயல்படும். என்றாலும் IMF பிரதிநிதிகளை சந்தித்தபோது நாம் புதியதோர் இணக்கப்பாட்டுக்கு வருவோம் எனத் தெரிவித்திருந்தோம்.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்றும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் பொய்யாக்கி, மின்சார கட்டணத்தை 15% ஆல் அதிகரித்துள்ளது.

அரசாங்கம் எடுத்துள்எ இந்த நடவடிக்கையால் ஏழைகள், சாதாரண மக்கள், உழைக்கும் மக்கள், தொழில்முனைவோர்கள்,சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வருவோரை கடுமையான சிக்கலுக்குள் தள்ளும்.

எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி, வழங்கப்பட்ட மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்க இடமளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பதற்கு பதிலாக மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைக்கும் நடவடிக்கையையே இந்த அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும்.

வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை மின்சார நுகர்வோருடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி குரல் எழுப்பும்.

ஐக்கிய மக்கள் சக்தி ஜனநாயக ரீதியிலான போராட்டத்திலும் ஈடுபடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.