திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம்

NCGG-SLIDA புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழான இரண்டாவது திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) மற்றும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் (SLIDA) ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின்கீழ் இலங்கையின் சிவில் சேவை அதிகாரிகளுக்காக இரண்டாவது தொகுதியாக இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டது.
விசேடமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள் 2025 மே 26 முதல் ஜூன் 6 வரை நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

டிஜிட்டல் மயமான ஆட்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பொது நிர்வாகத்தை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்திய இந்தப் பயிற்சித் திட்டத்தில் 40 இலங்கை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2024 டிசம்பரில் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கை சிவில் ஊழியர்கள் 1500 பேருக்கு பயிற்சி வழங்குவதற்கான உடன்படிக்கை செய்தார்.
கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழான பாரிய கடப்பாட்டின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் அமைந்துள்ளது.
முன்னதாக, 2025 ஏப்ரல் 21 முதல் மே 02, வரை இதே கருப்பொருளில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கையின் 41 அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இணைய வழிப் பொது சேவைகளை மேம்படுத்துதல், வலுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பை உருவாக்குதல், டிஜிட்டல் கட்டணங்கள் மூலம் நிதி சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல்..
புதிய டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் முறையை மேம்படுத்துதல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் ஆட்சி முறை நிலைமாற்றத்தை மேற்கொள்ளும் வழிகள் குறித்து இப்பயிற்சியின்போது கவனம் செலுத்தப்பட்டது.
சிரேஸ்ட இந்திய அதிகாரிகள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிர்வாக முன்னெடுப்புகளான ‘ஆதார்’, டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் நிதி உள்ளடக்கம், GeM, பொது நிதி முகாமைத்துவ முறைமை போன்றவற்றின் நுணுக்கங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகடமி, இந்திய தேர்தல் ஆணையம், பிரதமர் கதி சக்தி அனுபூதி கேந்ரா, தேசிய இ-அரசுப் பிரிவு மற்றும் உத்தரகாண்டில் உள்ள கணினி மயமாக்கப்பட்ட காணிகள் பதிவு மையம் போன்ற முக்கிய நிறுவனங்களுக்கும் பங்கேற்பாளர்கள் விஜயங்களை மேற்கொண்டனர்.

அத்துடன் தாஜ்மஹாலுக்கான கலாசார பயணத்துடன் இவ்விஜயம் நிறைவடைந்தது.
இலங்கையுடனான இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பில் திறன் விருத்தி செயற்பாடுகள் ஒரு முக்கிய விடயமாக காணப்படுகின்றது.
இந்தத் துறையில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், இந்தியப் பிரதமர் 2025 ஏப்ரலில் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோக பூர்வ விஜயத்தின்போது, இலங்கை அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் மேலதிகமாக 700 தனித்துவமான பயிற்சி ஆசனங்களை ஒதுக்குவதாக அறிவித்தார்.
அதன் அடிப்படையில் முக்கிய மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட இந்தியாவின் இந்த திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம் ஆண்டுதோறும் 1000 இலங்கையர்களுக்கு பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவலும் படங்களும் இந்திய உர்ஸ்தானிகராலய ஊடகப் பிரிவு
