அரசு நிருவகிக்கும் தோட்டங்களில் வளர்ச்சியில்லை – சிவப்பிரகாசம்

லெபனன் தோட்டக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுடன் கலாநிதி சிவப்பிரகாசம். - படம்: ம.நவநீதன்
அரசு நிருவகிக்கும் தோட்டங்களில் வளர்ச்சியில்லை என்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட பன்விலை பிரதேச பெருந்தோட்டங்கள் மிகப் பின் தள்ளப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அரசாங்கம் நிருவகிக்கின்ற தோட்டங்களாக இவை இருந்த போதும் முகாமைத்துவ செயற்பாடு காரணமாக மக்கள் வாழ்க்கை மிகப் பின் தள்ளப்பட்ட நிலையில் காணப்படுகின்றது
எனவே இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்பாட்டுக் குழு உறுப்பினரான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

கண்டி பன்விலை லெபனன் தோட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற வீடமைப்புத் திட்டத்திற்கான மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தெரிவித்தார்.
அரசு நிருவகிக்கும் தோட்டங்களில் வளர்ச்சியில்லை என்று குற்றஞ்சாட்டி மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி சிவப்பிரகாசம்:
பன்வில பிரதேசம் மிகப் பின் தள்ளப்பட்ட பெருந்தோட்டங்களைக் கொண்டுள்ளது. இங்கு மடுல்கல, கலாபொக்கை, உளு கங்கை போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள பல தோட்டங்கள் அரசு அமைப்புகளினாலேயே நிருவகிக்கப்படுகின்றன.
மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை அரச பெருந்தோட்ட யாக்கம் போன்ற நிறுவனங்கள், தோட்டங்களை முகாமை செய்து வருகின்றன. ஆனால் இந்தத் தோட்டங்களில் வாழும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

அந்த மக்களிடையே பல தொழில் சார், சமூக பிரச்சனைகள் காணப்படுகின்றன. குறிப்பாக, பெண்களும் சிறுவர்களுமே இதில் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
எனவே, அவர்களின் அபிவிருத்தி சம்பந்தமான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்.
குறிப்பாக இந்தத் தோட்டங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளது.
அதேபோல் இந்த வீட்டு வசதிகளுடன் எதிர்காலத்திலே அவர்களுடைய காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்படும்.
ஆனால், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் வீடமைப்புத் திட்டம் உட்பட அனைத்தும் மக்களின் பங்கு பற்றுதலுடன் மட்டுமே செயல்படுத்தப்படும்.

அந்த அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் தங்களுடைய தலைமையிலும் கண்காணிப்பிலும் செயல் படுத்த வேண்டும். எனவே மக்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
அதேபோல் தேயிலை பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தோட்டங்கள் காடுகளாக இருப்பதை விட மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் வளம் சேர்க்கும் விதத்தில் மாற்றி அமைக்கப்படும்.
மேலும் முகாமைத்துவ மாற்றங்கள் செயல்படுத்தப்படுவது மிக அவசியமாகின்றது. இதுவிடயத்தில் மாற்றம் மிக அவசியமாகின்றது.
லெபனன் தோட்டத்தில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், வரலாற்றிலே மிக முக்கியமான ஒன்றாகும்,
கண்டி பன்வில பிரதேச லெபனான் தோட்டம், மடுல்கலை தோட்டம் போன்றவற்றிலே வாழுகின்ற தமிழ் மக்களின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இந்தத் தோட்டங்களில் வீடமைப்பு, காணி, நியாயமான வேலை அல்லது கௌரவமான தொழில், வாழ்வதற்கான சம்பளம் போன்ற விடயங்கள் கவனம் செலுத்தப்பட வேண்டியவைஈ என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் அப்பிரதேசத்தைச் சார்ந்த பொதுமக்கள் இளைஞர்கள் பெண்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
பன்விலை ம. நவநீதன்

பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்குன்குனியா நோய்
