திருக்கோவில் சூழல்நேயப் பிரதேசமாக மாறும்

திருக்கோவில் சூழல்நேயப் பிரதேசமாக மாறும் என்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரிவித்தார்.
அம்பாரை திருக்கோவில் பிரதேச சபையினால் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட தம்பட்டை ஓய்வு பூங்காவில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில் அனைத்து அரச திணைக்களங்களின் பங்குபற்றுதலுடன் வியாழக்கிழமை (ஜூன் 05) நடைபெற்றது.
இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து முற்றாக பொலீத்தீன் பாவனையை ஒழிக்கும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரச திணைக்களங்களும் ஒன்றிணைந்து மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.
இந்நிகழ்வில் தவிசாளர் சசிகுமார் பிரதேச சபை உறுப்பினர்கள் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன், திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் எஸ்.திவாகரன், திருக்கோவில் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், திருக்கோவில் பிரதேச செயலக கிராம நிருவாக அதிகாரி, திருக்கோவில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், திருக்கோவில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சனசமூக நிலைய பிரதிநிதிகள், முன்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார்:
திருக்கோவில் பிரதேசமானது இயற்கை வளங்கள் நிறைந்த எழில்மிக்க பிரதேசமாகும். அந்தவகையில் இந்த பிரதேசத்தில் பொலித்தீன் பிளாஸ்டிக் பொருள்களின் பாவனைகளை அகற்றி சுழல் நேய பிரதேசமாக மாற்றுவோம்.
கடற்கரையை அண்டிய பெரிய களப்பினை அழகுபடுத்தி ஒரு பாரிய சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான திட்டங்களையும் நாம் முன்வைத்துள்ளோம், என்றார்.
திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு