பிரதமர் ஹரினியின் பெருநாள் வாழ்த்து

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய படம்: ஊடகம்
இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் மகிழ்ச்சியான ஈதுல் அல்ஹா பெருநாளாக அமைய வேண்டுமென பிரதமர் ஹரினியின் பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சுயநலத்தைத் துறந்து, சகவாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் நம் நாட்டிலும் உலகெங்கிலும் பரவி வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இன்று ஹஜ் பெருநாளை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறார்கள்.
அவர்கள் கொண்டாடும் இந்த ஹஜ் பெருநாளின் இம்முறை சிறப்பு என்னவென்றால், அவர்களின் இந்த நோக்கத்துடன் இசைந்துபோகின்ற கொள்கையுடைய ஓர் அரசாங்கத்தின் கீழ் இம்முறை ஹஜ் பெருநாளைக் கொண்டாட அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதேயாகும்.
ஏனெனில், அனைவருக்கும் வளங்கள் சமமாகப் பகிரப்படும், தன்னலமற்ற ஒரு சமூகத்தை நாட்டில் உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை இறைவனுக்காக அர்ப்பணிக்க முன்வந்ததை நினைவுகூரும் இந்த வழக்கம், இஸ்லாம் மார்க்கத்தின் தியாக உணர்வை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகும்.
அந்த வகையில், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய அன்பர்கள் ஒன்றிணைந்து, உலக அமைதிக்காக மத அனுஷ்டானங்களை நிறைவேற்றும் ஹஜ் பெருநாள், முழு உலக மக்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகும் என்பதே எனது எண்ணமாகும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.