திருக்கோவில் பிரதேசசபையில் சுயேச்சை ஆட்சிபீடம் ஏறியுள்ளது.
சுயேச்சைக் குழுவினர் பதவியேற்பு இன்று நடைபெற்றதுடன் தவிசாளராக சுந்தரலிங்கம் சசிகுமார் சத்தியப்பிரமாணம். செய்துகொண்டார்.
அம்பாரை திருக்கோவில் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் வண்டில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் சுபவேளையில் சத்தியப்பிரமாணம் செய்தனர்.

பதவியேற்பு வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதோடு தமிழர்களின் பாரம்பரிய முறையில் உறுப்பினர்கள் அனைவரும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
பின்னர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு திருக்கோவில் பிரதேச சபைக் கட்டடத்தில் சத்தியப்பிரமாண வைபவம் நடைபெற்றது.
பிரதேச சபையின் தவிசாளராக சுந்தரலிங்கம் சசிகுமார் பதவியேற்றதுடன் உப தவிசாளர், உறுப்பினர்கள் ஆகியோரும் சத்தியப்பிரமாணம் செய்தனர்.

சுயேச்சைக் குழு 02இல் போட்டியிட்டு வெற்றிபெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரும் சத்தியப் பிரமாணம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.திவாகரன், திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ், கல்வியாளர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த தவிசாளர், தமது வண்டில் சின்னம் சுயேச்சைக் குழுவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த திருக்கோவில் மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வதாகக் கூறினார்.
திருக்கோவில் பிரதேசசபையில் சுயேச்சை ஆட்சிபீடம் ஏறி, இலங்கையில் ஒரு முன்மாதிரியான பிரதேச சபையாக மாறி மக்களுக்கு சேவை செய்வதே தமது இலக்கு எனவும் அவர் தமது கன்னியுரையில் தெரிவித்தார்.
திருக்கோவில் எஸ்.கார்த்திகேசு


