உகந்தை மலையில் புத்தர் இல்லை

க. கோடீஸ்வரன் பா.உ படம்: ஊடகம்
உகந்தை மலையில் புத்தர் இல்லை என்றும் வீண் முரண்பாட்டை உருவாக்க வேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
உகந்தை மலை ஸ்ரீமுருகன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை இருப்பதாகக் கூறி
இன முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்துகளின் வரலாற்று சிறப்புமிக்க உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் எந்தவோர் இடத்திலும் புத்தர் சிலை வைக்கப்படவில்லை.
இன நல்லுறவை சீர் குலைக்கும் சக்திகளின் சதி முயற்சிகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனத் தமிழரசு கட்சியின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், உகந்தைமலை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட 7 ஏக்கர் காணியில் உள்ள எந்தவொரு மலையிலும் புத்தர் சிலை வைக்கப்படவில்லை.

வனபரிபாலன திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் சிறிய ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது புதிதாக இங்கு வைக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கடற்படை முகாமிற்கு அண்மையில் கடற்கரை ஓரமாக உள்ள மலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக தமிழ் சிங்கள மக்களுக்கிடையில் இன முரண்பாடுகளைத் தோற்றுவித்து அமைதியைச் சீர்குலைக்கும் வகையில், மத ரீதியாகத் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் சதி முயற்சிகளுக்குத் தமிழ் மக்கள் இடமளிக்காது சிந்தித்து செயற்பட வேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக கடந்த வாரம் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள், புகைப்படங்கள் தொடர்பாக நான் நன்கு அவதானித்த போது உகந்தை மலையில் புத்தர் இல்லை என்பது தெளிவாகியது.
ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி வளாகத்தில் எந்தவோர் இடத்திலும் புத்தர் சிலை வைக்கப்படவில்லை.
இவ்வாறு கோடீஸ்வரன் எம்பி மேலும் தெரிவித்தார்.
திருக்கோவில் எஸ். கார்த்திகேசு
