வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதி

வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதி

வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என்று மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

“இந்நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் மக்கள் மத்தியில் முதலில் நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எமது ஆட்சிகாலத்தில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”-

என்று கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு, வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் அரியாலை ஜே ஹொட்டலில் அண்மையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் முதலீடு, வர்த்தக மன்றம் - 2025' தலைப்பிலான கலந்துரையாடல்
மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் உரை – படம்: மீன்பிடி அமைச்சு

இந்த நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் தனது உரையில் மேலும் கூறியவை வருமாறு,

“ வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். அண்மையில் யாழ். சென்றபோது அங்கு என்ன செய்ய வேண்டும் என ஜயசூரிய கேட்டார். சர்வதேச விமான நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.

இப்படி வடக்கு குறித்து பல வழிகளிலும் சிந்திக்கப்படுகின்றது. எவ்வித பிரிவினையும் இன்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

முதலீட்டாளர்கள் வடக்குக்கு வரவேண்டும். இங்குள்ள துறைகளில் முதலீடுகளை செய்ய வேண்டும். இங்கு வந்துள்ள முதலீட்டாளர்களுக்கும் இந்த அழைப்பை விடுக்கின்றேன்.

புலம்பெயர் தமிழர்கள் இது தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும். முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களுக்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

தமிழ் மக்களின் இருப்பு பற்றி கவலை வெளியிடுகின்றனர். இங்குள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதால்தான் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.

எனவே, இலங்கை நம்பிக்கையான நாடுதான் என்ற நம்பிக்கையை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் – என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஊடக செயலாளர் – கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சு

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.