பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

நடிகர் ராஜேஷ் படம்: பீபீசி
1970களிலும் 80களிலும் தமிழ்த் திரையுலகில் பிரகாசித்த பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார். மாறுபட்ட, அழுத்தமான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் ராஜேஷ்.
தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரான ராஜேஷ் சென்னையில் இன்று (மே 29) காலமானார். அவருக்கு வயது 75. உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலை 8.15 அளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராஜேஷிற்கு இன்று காலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜேஷின் மனைவி கடந்த 2012ஆம் ஆண்டிலேயே காலமாகிவிட்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ், தொடர்ந்து கவனத்தை ஈர்க்கத்தக்க, அழுத்தமான பாத்திரங்களில் திரையில் தோன்றினார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த அவர், டப்பிங் குரல் கலைஞராகவும் திகழ்ந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ள நடிகர் ராஜேஷ், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும், தவிர்க்க இயலாத காரணங்களால் தன்னால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக பேட்டி ஒன்றில் நடிகர் ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
கே. பாக்கியராஜ் திரைக்கதையில் பாலகுரு இயக்கிய ‘கன்னிப் பருவத்திலே’ படத்தில் நடிகர் ராஜேஷ் கதாநாயகனாக நடித்தார். இதுவே அவரது முதல் படமாக அமைந்தது.
‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய வேடத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும், அந்தப் பாத்திரம் இவருக்கு ஒரு மறக்க முடியாத பாத்திரமாக அமைந்தது.

2024ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி – காத்ரீனா கைஃப் நடித்து வெளிவந்த ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைப்படம்தான் இவர் நடித்து வெளியான கடைசித் திரைப்படமாகும்.
ஆசிரியராக இருந்தவர் நடிகரானது எப்படி?
1949ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வில்லியம்ஸ் – லில்லி கிரேஸ் தம்பதியின் மகனாகப் பிறந்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய இடங்களில் படித்தாலும் பட்டப்படிப்பை நிறைவுசெய்யவில்லை.
சில காலம் சென்னையில் ஆசிரியராகப் பணிபுரிந்த அவருக்கு 1974ல் ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்குப் பிறகு நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ‘கன்னிப்பருவத்திலே’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்குப் பிறகு தொடர்ச்சியாக அவர் திரைப்படங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக யூ டியூபில் தனது அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துவந்தார்.
பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார் என்ற செய்தி தமிழ் சோதிட உலகிற்கும் பெரும் இழப்பாகும். சோதிட ரீதியாக அவரின் அனுபவங்களை அவர் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வந்தார.
முலம்-பீபீசி