ஆலையடிவேம்புவில் அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆலையடிவேம்புவில் அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: ஆலையடிவேம்புவில் ஆசிரியர், அதிபர் மீது நடத்தப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலைக் கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயலமர்வு ஒன்றிற்கு அறிவிக்க மாணவி ஒருவரின் வீட்டுக்குச் சென்ற அதிபர், ஆசிரியர் மீது மாணவியின் சகோதரியின் காதலன் என்று அறியப்படுபவர் வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று திங்கட்கிழமை (26) கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோவில் கல்வி வயத்தின் கீழ் உள்ள ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபர் ஆசிரியர் இருவரும் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்குச் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
கடந்த சனிக்கிழமை தம்பட்டை பிரதேசத்தில் இடம்பெற இருந்த செயலமர்வு தொடர்பாக அறிவிப்பதற்காக மாணவி ஒருவரின் வீட்டிற்குக் கடந்த வெள்ளிக்கிழமை (23) இவர்கள் சென்றிருந்தனர்.
அப்போது அங்கு மாணவியின் சகோதரியின் காதலன் எனக் கூறப்படுபவர் ஆசிரியர் மீதும் அதிபர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டு அவர்களது இரு மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்திருக்கிறார்.
இதனால் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவரைப் பொலிசார் கைது செய்தனர்.
இந்த அதிபர் ஆசிரியர் மீது இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஆலையடிவேம்புவில் அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம் தேசியப் பாடசாலை முன்னால் காலை 8.30 இற்கு ஒன்று திரண்டனர்.

அப்போது, “யார் தருவார்.ஆசிரியர்களுக்கு உத்தரவாதம், ஆசிரியர் மீது அன்பு காட்டு!. வஞ்சனை தவிர்த்து வழி காட்டிய ஆசிரியரை மதியுங்கள்.கல்விச் சமூகத்தை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடாதீர்கள்!

பாதுகாப்பு வேண்டும்! ஆசிரியர் அதிபர்களுக்கு! அழிக்காதே அழிக்காதே கல்வி சமூகத்தை அழிக்காதே! அறம் வழி நடப்போம்! அதிபர் ஆசிரியர் பெருமை காப்போம்! “
போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்களை ஏந்தியவாறு அங்கிருந்து திருக்கோவில் மணிக் கூட்டுக் கோபுரம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு சுமார் அரை மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுத் தமது கண்டனத்தைத் தெரிவித்த பின்னர், ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருக்கோவில் எஸ். கார்த்திகேசு
