சிங்கப்பூருக்கான இடத்தை உறுதிசெய்ய வேண்டும்

பிரதமருடன் புதிய அமைச்சரவை - படம்: தமிழ்முரசு
சிங்கப்பூருக்கான இடத்தை உறுதிசெய்ய வேண்டும்: மாறிய உலகில் சிங்கப்பூருக்கான இடத்தை உறுதிசெய்வதே புதிய அரசாங்கத்தின் தலையாய முன்னுரிமை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
வல்லரசுகள் உத்திகளை மறுமதிப்பீடு செய்து, தங்கள் கை ஓங்கவேண்டும் என்பதற்காக நிலைப்பாட்டை மாற்றுவதால் போட்டி தீவிரமடைகிறது.
கருத்து மோதலில் சிறிய நாடுகள் சிக்கிக்கொள்ளும் அல்லது உரையாடலிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுவிடும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
இஸ்தானாவில் வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெற்ற தமது புதிய அமைச்சரவையின் பதவியேற்புச் சடங்கில் பேசிய பிரதமர் வோங், “சிங்கப்பூர் மேற்செல்லாமல் அப்படியே நிற்காது. நாம் செயலற்று இருக்கலாகாது,” என்றார்.
“தெளிவான பார்வையுடனும் முனைப்புடனும் மாறும் சூழலுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றியமைத்து சிங்கப்பூருக்கான இடத்தை உறுதிசெய்ய வேண்டும்” என்றார் பிரதமர்.
முன்பிருந்ததைவிடக் கூடுதல் நிச்சயமற்றதாகவும் கணிக்க முடியாததாகாவும் விளங்கும் உலகில், ஒரு காலத்தில் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த நிலைமைகள் மாறுவதாகப் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
“அமைதி, பாதுகாப்பு, தடையற்ற வர்த்தகத்திற்கு அடித்தளத்தை அமைத்த விதிகளின் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்கு முறிந்து வருகிறது.
பலதரப்பு ஒத்துழைப்பின் இடத்தை சிக்கலான இருதரப்பு, பரிவர்த்தனை ஒப்பந்தங்கள் பிடித்துக்கொள்கின்றன. அங்கு வலிமையானதே சரியானது என்ற நிலை நிலவுகிறது,” என்றார் திரு வோங்.
“நமது இலக்கு இந்த நிச்சயமற்ற உலகில் நாட்டை வழிநடத்துவது மட்டுமன்று. அதைச் சிறப்பாக வடிவமைக்க உதவுவதும்கூட. ஒத்த எண்ணம் கொண்ட பங்காளித்துவ நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதன்மூலம், கொள்கைகளையும் மதிப்புகளையும் நிலைநிறுத்துவதன் மூலம், சிறிய நாடுகளும் தங்களுக்கென ஓர் இடத்தைப் பெற முடியும்,” என்றார் அவர்.
