இந்தியாவுடன் வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் விருப்பம்

இந்தியாவுடன் வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் விருப்பம் கொண்டிருப்பதாகப் புதிய ஆய்வுத் தகவலொன்று தெரிவிக்கின்றது.
பாகிஸ்தான், இந்தியா இடையே சுமூக உறவுகள் நிலவ வேண்டும் என பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் விரும்புகின்றனர் என்பது அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இருதரப்பு உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என 49% பாகிஸ்தானியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே 12 முதல் 18ஆம் தேதிவரை பாகிஸ்தான் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு பேரிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கேலப் பாகிஸ்தான் (Gallup Pakistan) இந்த ஆய்வை மேற்கொண்டது.
அதன்படி, போர் நிறுத்தத்திற்குப் பிறகு உறவுகளை இயல்பாக்குவதற்கு இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை அதிகரிக்க 49% சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், 35 விழுக்காடு பாகிஸ்தானியர்கள் வர்த்தக உறவுகளை வலுவாக்க எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதே வேளையில், இருதரப்பு உறவுகளைச் சீராக்கவும் விளையாட்டுப் போட்டிகள் கைகொடுக்கும் என 48% பாகிஸ்தான் குடிமக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு 35% எதிர்ப்பும் நிலவுகிறது.
இந்தியாவுடன் வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் விருப்பம் கொள்ளும் அதேநேரம், கல்வித் துறையில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்று 44%, கலாச்சார உறவுகளை அதிகரிப்பதற்கு 40% பாகிஸ்தானியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
1947ல் நீங்கள் இருந்திருந்தால், இந்தியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக இருந்திருப்பீர்களா? என்ற கேள்விக்கு, 86% பேர் பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்திருப்போம் என்றும் மூன்று விழுக்காட்டினர் எதிர்த்திருப்போம் என்றும் பதிலளித்தனர். 4% பேர் கருத்து தெரிவிக்கவில்லை.
மதிமுரசு
