தமிழில் கவியெழுதும் சிங்களக் கவிஞர்

கவிஞர் நாக்கியாதெனி விஜேசேகர
தமிழில் கவியெழுதும் சிங்களக் கவிஞர் என்று தலைப்பிடவும் கூச்சமாகத்தான் இருக்கிறது. சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொணடவர் என்பதால் அப்படிச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.
நாக்கியாதெனி விஜேசேகர! பிறந்து வளர்ந்தது காலியில் உள்ள நாக்கியாதெனி. தென் மாகாணத்துச் சிங்களவர்கள் பற்றித் தெரியாதவர்கள் சொல்லும் முரணான கருத்துகளை எல்லாம் உடைத்தெறிந்திருக்கிறார்.
கவிதைக்குத் தலையிட்டால் உலகத்திற்குத் தலையிட்டதற்குச் சமம் என்பார்கள். இது தெரியாமல் நம்மில் பலர் சமூக வலைத்தளத்தில் எதையெதையோ கிறுக்கிக்கொண்டு திரிகிறார்கள்.
ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலும் சிங்களத்திலும் கவிதை வடித்துக்கொண்டிருக்கிறார் நாக்கியாதெனி விஜேசேகர. சிங்களத்தில் சிந்திப்பதைவிடவும் அவருக்குத் தமிழில் கவிதை நன்றாக வருகிறது.
நினைத்தவரெல்லாம் கவிஞராக முடியாது. கவிஞர்கள் பிறக்கிறார்கள் என்பார்கள். அதனை மெய்ப்பிப்பவராகவே விளங்குகிறார் விஜேசேகர.
தமிழில் கவியெழுதும் சிங்களக் கவிஞர் விஜேசேகர போன்ற பலர் உருவாக வேண்டும். அவரது எதிர்பார்ப்பு, பேச்சு, மூச்சு எல்லாம் நல்லிணக்கம், மானுட நேயம்!
ஒரு முறை அவர் என்னைச் சந்தித்தபோது, அவர் முதற்தடவையாக சிங்களத்திலும் தமிழிலும் வெளியிட்ட , “விஜயவின் கனவு ” விஜய சிஹினய என்ற கவிதை நூலைத் தந்தார். அவருக்கே உரிய தமிழில் கவிதைகள் விளைந்திருந்தன.
தொடருங்கள்…நிறுத்த வேண்டாம்! என்றது மட்டுமல்லாமல் சில மேடைகளிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதற்கு வழிவகுத்தோம். பலரையும் அவர் சந்தித்தார். தமிழ் கவிதைப் பரப்பு அவரை அரவணைத்துக்கொண்டது.
அதன் விளைவாக, தென் பகுதியிலுள்ள விஜேசேகரவுக்கு வடக்கில் நூல் வெளியிடும் அரிய வாய்ப்பு வரமாகியிருக்கிறது.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை உப பீடாதிபதி ந. பார்த்திபன் அவர்களின் அணிந்துரையுடன், வவுனியா விஜய் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கிறது விஜேசேகரவின் முதலாவது கவிதைத் தொகுதி ‘சின்னமலர் “

சின்னமலர் பற்றி விஜேசேகர எனக்கு நிரம்ப சொல்லியிருக்கிறார். விஜேயின் கவிதைப் பிரவாகத்திற்கும் மனிதநேய குண மேம்பாட்டுக்கும் வித்திட்டவர் சின்னமலர்தான். சின்னமலர் கற்பனை பெயரானாலும் மனத்தைக் கனக்கும் பெயர்!
இளம் வயதில் விஜேசேகர ஒரு மளிகைக் கடையில் சிப்பந்தியாகப் பணியாற்றியபோது இடைக்கிடை கடைக்கு வந்து தமிழ் சொல்லிக் கொடுத்தவர் சின்னமலர்.
“அதிக்கி என்ன சொல்றதிங், இதிக்கி என்ன சொல்றதிங் “என்று சின்னமலரிடம் தமிழ் கற்றவர், மனத்தையும் பறிகொடுத்த கதை நெஞ்சத்தைப் பிழியும் பெரிய கதை!
தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே இனத்தவராக, ஒரே குடும்பமாக வாழக்கூடிய சூழல் இருந்தும் ஏன் முடியவில்லை? விஜேசேகரவின் மனத்தை நெருடிக்கொண்டிருக்கும் இந்தப் பெரிய வினாவைத் தோற்றுவித்தவர் சின்னமலர்.
தமிழில் கவியெழுதும் சிங்களக் கவிஞர் என்ற பெருமைக்குரிய விஜேசேகர: “கவிதைக்கு ஆசைகொண்டவன் நான். கவிதைக்கு ஆசைகொண்டு நேசிப்பவனை கவிதை கட்டியெழுப்பும். தழுவிக்கொள்ளும்.
அதுபோல், மொழியை நேசிப்பவனை மொழியும் கட்டித்தழுவிக்கொள்ளும். நான் மொழியை நேசித்ததால், கவிதை உணர்வுகள் என்னுள் கரைபுரண்டோடின “என்கிறார்.
விஜேசேகரவின் சில கவிதைகளைப் பாடல்களாகவே பாடி ரசிக்கலாம். எதுகை, மோனை, சந்தம் நிறைந்திருப்பதால் சில கவிதைகளை அவர் பாடிக்காட்டுகிறார்.
புதுக்கவிதைகள்தான் என்றாலும் சில கவிதைகளை சந்தத்துடன் எழுதியிருக்கிறார். அன்பு, பாசம், நட்பு, உண்மை, நேர்மை, உழைப்பு, நம்பிக்கை, மனித நேயம் என மனிதனின் எல்லா முகங்களையும் கவிதையில் கொண்டு வந்திருக்கிறார்.
இருப்பினும், சின்னமலர் எங்கென்றாலும் ஓரிரு வரிகளில் வந்து போகத் தவறமாட்டாள்!
எனக்குக் கவிதைகளும்
என் உயிரும் சமம்
என் கவிதைகளில் மெய்யைத் தவிர
பொய்கள் இல்லை!
ஆனால்
எனக்குக் கவிதையாக்கிக் கொள்ள முடியாமல்
தொலைந்துபோன எத்தனையோ
கவிதை உணர்வுகள்!
எழுத முடியாமற்போன
எத்தனை கவிதைகள்
என் இதயத்திற்குள்
ஆடிப்பாடி விளையாடிய
நீயும் எனக்கு
தொலைந்துபோன ஒரு கவிதை
என்று மனத்தில் ஈரம் சொட்ட எழுதுகிறார். அவரது கவிதைகளில் சிறந்த கவிதை என்று எதையும் சிறப்பித்துச் சொல்ல வேண்டியதில்லை. எல்லாக் கவிதைகளும் கவிதைகள்தான்.

கவிஞர் விஜேசேகரவின் முதலாவது கவிதைத் தொகுதி வெளிவருவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நட்பு வட்டங்களும் ஒத்துழைத்திருக்கிறார்கள்.
காலி, தல்கஸ்வெல தமிழ் வித்தியாலய அதிபர் ஏ. எஸ். எம். காமில், ஆசிரியை திருமதி யமுனா கபிலன் ஆகியோர் ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள்.
கவிதைகளை ஒப்புநோக்கி, இற்றைப்படுத்த பலர் உதவியிருக்கிறார்கள். வெலிகம எம். ஆர். எப். ரஸீதா அழகான அட்டைப் படத்தை வரைந்துதவியிருக்கிறார்.
வவுனியா விஜய் பதிப்பக உரிமையாளர் திருவாளர் விஜய், இன்னொரு விஜய்க்கு உதவியிருக்கிறார். எல்லோரும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.
புத்தக வெளியீடு என்றாலே அஞ்சியொதுங்கும் சூழலில், விஜேசேகரவின் கவிதை நூலைத் தைரியமாக வாசித்து நேசிக்கலாம், இருப்பவற்றுக்கு எந்தப் பங்கமும் வராது.
அவரை இன்னுமின்னும் தமிழில் கவிதை நூல் வெளியிடக் கைதூக்கிவிட வேண்டும், அவர் நல்ல கவிதை தரும் கவிஞர் என்பதாலும், இன, மத, மொழிகளிடை பாலம் அமைப்பதாலும்.
நிறைவாக, நாக்கியாதெனி விஜேசேகர கவிஞர் என்பதால் நல்லிணக்கத்தைச் சிந்திக்கிறார் என்றாலும் அவரது மகள் புத்தி தரங்கனி விஜேசேகர, அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தவர்.
தன் சிறுவயதிலேயே இராமாயணம், மகா பாரதக் கதைகளை அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன் என்று இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
அப்பா தொடர்ந்தும் தமிழில் எழுத வேண்டும் என்கிறார் தரங்கனி. அவரும் ஒரு கவிஞர் என்பதையும் நீங்கள் இந்த நூலில் அறிந்துகொள்ள முடியும்.
தமிழ்க் கவிதைப் பரப்புக்கு நாக்கியாதெனி விஜேசேகரவை வரவேற்போம்!
நூலைப் பெற விரும்புவோர் கவிஞருடன் தொடர்புகொள்ளலாம் – 077 958 4689
விசு கருணாநிதி, முகாமைத்துவ ஆசிரியர் -மதிமுரசு
