கொழும்புவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு

கொழும்புவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
கொழும்பு வெள்ளவத்தையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றபோது சிலர் எதிர்ப்பினை வெளியிட்டனர். இதனால், வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
அங்குப் பொலிஸார் பாதுகாப்பு அளித்தனர். குழப்பத்திற்கு மத்தியிலும் நினைவேந்தல் நடத்தப்பட்டது.
இராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்று சிலர் கோஷம் எழுப்பியவாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொழும்புவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் ஏனைய இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றன.
2009 மே 18 இல் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான உறவுகள் துவம்சம் செய்யப்பட்டார்கள். அந்த நாளை நினைவுகூர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விசேடமாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வூர்வமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்புவில் வலி சுமந்த நினைவுக் கஞ்சி
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு வலி சுமந்த நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி இன்று மட்டக்களப்பு பிள்ளையாரடி புரவிப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இறுதி யுத்தத்தில் ஆகுதியானவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


உலகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்று வரும் சூழலில் இலங்கையின் வடபகுதியிலும் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டது.

மதிமுரசு விசேட நிருபர்
