வடக்கில் மே29இல் போராட்டம் வெடிக்கும்

வடக்கில் மே29இல் போராட்டம் வெடிக்கும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
வட பகுதி மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க மே 28 வரை காலக்கெடு கொடுத்துள்ள சுமந்திரன், தவறினால் 29ஆம் திகதி பாரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று மாலை ஊடகச் சந்திப்பை நடத்தி அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும்.
தவறினால், வடக்கில் மே29இல் போராட்டம் வெடிக்கும். அன்று ஆரம்பமாகும் போராட்டம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு முன்னெடுக்கப்படும்.
வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டும், பல தடைவைகள் இடம்பெயர்ந்த காரணத்தாலும் தமது காணிகளுக்கான ஆவணங்களை இழந்துள்ளனர்.
சிலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் அவர்களது காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பழமையான இந்தச் சட்டம் பிரயோகிக்கப்படக்கூடாது. இந்த வர்த்தமானி பிரசுரம் உடனடியாக மீளப் பெறவேண்டும் என்று நாங்கள் கூறி இருக்கின்றோம்.
அப்படி மே மாதம் 28 ஆம் திகதிக்கிடையில் இது மீளப்பெறாவிட்டால், நாங்கள் பாரியதொரு போராட்டத்தை அரசுக்கு எதிராக நடத்துவோம் என்று ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம்.
மே மாதம் 29 ஆம் திகதி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும். இது நான் ஏற்கனவே கூறியதைப் போல் ஒரு கட்சி சார்ந்த நடவடிக்கை என்று எவரும் கருதக்கூடாது. இது எங்களுடைய இருப்பின் மிக முக்கிய கூறாகிய நிலத்தைப் பற்றிய விடயம்.
நிலம் இருந்தால்தான் இனம் தொடர்ந்து இருக்கலாம். ஆகையினால் இது சகலராலும் ஆதரிக்கப்பட வேண்டிய போராட்டம்.
சகல அரசியல் கட்சிகளுக்கும் நான் அன்பாக விடுக்கின்ற ஒரு வேண்டுகோள், இதில் இணைந்துகொள்ளுங்கள். இது எனது கட்சி நடத்துகின்ற போராட்டமாகக் கருதாமல் நாங்கள் அனைவரும் இணைந்து செய்கின்ற போராட்டமாக இருக்க வேண்டும்.
பொது அமைப்புகள், மக்கள், விசேடமாக பாதிக்கப்பட்ட மக்கள் இதில் இணைந்துகொள்ள வேண்டும். ஆகவே, அரசுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
ஆகவே, எதிர்வரும் 29 ஆம் திகதி போராட்டம் நடத்துவதற்கான ஆயத்தங்களை நாங்கள் செய்கின்றோம்.
இது இந்த நாட்டை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கக்கூடிய ஒரு போராட்டமாக இருக்கவேண்டும். ஏனென்றால் இங்கே அரசு செய்ய நினைத்திருக்கின்றது மிக மிகப் பாரதூரமான விடயம்.
ஆகையினாலே இது எவ்வளவு பாரதூரமானது என்பதை உணர்ந்து சகலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நான் அன்பாகக் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
