பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சர்வதேச நாடுகளின் ஆதரவை நாம் பெற்றுள்ளோம். பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என ஐ.நா., தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கடந்த 7 ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டனர்.
இருதரப்பு பாகிஸ்தானுடனான நமது உறவு மற்றும் பிரச்னை என்பது நிச்சயம் இரு தரப்பானது. பல ஆண்டுகளாக இதே நிலைப்பாடு தொடர்கிறது. இதில் மாற்றம் ஏதும் இல்லை.
பாகிஸ்தானுடன் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார்.
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது.
பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அவர்கள் மூட வேண்டும். என்னசெய்ய வேண்டும் என அவர்களுக்கு நன்றாக தெரியும்.
பயங்கரவாதம் குறித்து என்ன செய்ய வேண்டும் என அவர்களுடன் பேச தயாராக இருக்கிறோம்.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதகவே இருக்கும்.
காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டிய விஷயம் இருக்குமே ஆனால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து அந்நாடு வெளியேறுவதே ஆகும். இது குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம்.
இதேநேரம், இந்தியாவில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் பகுதியிலிருந்து தானாகவே வெளியேறுவதே மரியாதையாக இருக்கும் என்று பலுசிஸ்தான் கிளர்ச்சி இராணுவத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று தெரிவித்துள்ள அவர், காஷ்மீரைவிட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
தனி நாடாக அறிவிக்கப்பட்டுள்ள பலுசிஸ்தானில் இந்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
