கசிப்பு வியாபாரத்தை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம்

கசிப்பு வியாபாரத்தை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் செய்த மக்களைப் பொலிஸார் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்த சம்பவமொன்று இன்று காலை இறக்குவானை – பாராவத்தை பகுதியில் இடம்பெற்றது.
நீண்டகாலமாகத் திட்டமிட்ட முறையில் சட்டவிரோதமாகக் கசிப்பு மதுபானம் விற்பனைன செய்யப்படுவதாகவும், அதனை விற்பவர் ஊர் மக்களிடம் சண்டித்தனம் புரிவதாகவும் பொதுமக்கள் முறையிடுகின்றனர்.
பதின்ம வயது பிள்ளைகளைப் பல்வேறு வேலைகளில் அமர்த்தி, ஊதியத்திற்குப் பதிலாகக் கசிப்பு வழங்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
சில நாள்களுக்கு முன்பு 14 வயது சிறுவனுக்கு இவ்வாறு கூலியாகக் கசிப்பு வழங்கப்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்காக இரத்தினபுரி பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாச ஸ்தலத்திற்கு விஜயம் செய்திருந்தார். இந்த சட்ட விரோத செயற்பாடு குறித்துப் பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மககள் அவரிடம் முறையிட்டனர்.
கசிப்பு வியாபாரத்தை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள், நேற்று முன்தினம் தேங்காய் பறித்த ஒருவருக்குப் பணத்திற்குப் பதில் கசிப்பு வழங்கியதாகவும் பொலிஸ் அத்தியட்சகரிடம் சுட்டிக்காட்டினர்.
சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்களைப் பொலிஸ் விசேட அதிரடிப் பமையினர் கைது செய்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை ஏழு மணி முதல் சுமார் மூன்று மணித்தியாலம் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் பொலிஸ் அதிகாரியின் வாக்குறுதியை அடுத்துப் போராட்டத்தைக் கைவிட்டனர்.
கசிப்பு விற்பனை தொடருமானால், தமக்கோ உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கோ உடனயாக அறிவிக்குமாறும் பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
எஸ். ஆர். ரவீந்திரன்
