பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இனி பாதுகாப்பில்லை

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இனி பாதுகாப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் இனி பயங்கரவாதிகளின் பாதுகாப்பான இடமாக இருக்க முடியாத அளவுக்கு இந்தியப் படையினர் நடவடிக்கை எடுத்துச் சரித்திரம் படைத்திருப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாகாணத்தின் ஆடம்பூரில் உள்ள இந்தியாவின் மிகப் பெரிய இரண்டாவது விமானத் தளத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு விமானப் படை அதிகாரிகளைச் சந்தித்த பிரதமர், அனைவருக்கும் நாட்டின் சார்பில் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்தார்..
பாகிஸ்தான் தாக்க முயற்சித்துத் தோற்றுப் போன இந்த விமானப் படைத் தளத்திலிருந்தே பாகிஸ்தான் வான் தளத்தை இந்தியப் படையினர் தாக்கியுள்ளனர்.
இந்தியப் படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படைத்தளம், அணுவாயுத நிலைகள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தப் போரில் தாம் வெற்றிபெற்றிருப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.
ஆனால், பாகிஸதான் இனியும் அணுவாயுதத்தைக் கொண்டு இந்தியாவை மிரட்ட முடியாது என்றும் அதன் முதுகெலும்பை இந்தியப் படையினர் முறித்திருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இனி பாதுகாப்பில்லை என்று தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியத் தேசம் ஒட்டுமொத்த படையினருக்கும் கடன்பட்டிருக்கிறது என்றார்.
அங்குத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:
நீங்கள் புதிய வரலாற்றை எழுதியிருக்கிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறார்கள். எமது வான்படை, கடற்படை, இராணுவம் என முப்படையினரும் தம் வீரத்தை நிரூபித்திருக்கிறார்கள்.
இது புதிய இந்தியா. ஒப்பரேஷன் சிந்தூர் ஒரு புதிய நடவடிக்கை. ஆனால், அது சாதாரணமான நடவடிக்கையன்று. அதனை இன்று முழு உலகமும் பேசுகிறது.
பாகிஸ்தான் இனி எம்மிடம் வாலாட்ட முடியாது. அடித்தால் அடி! எந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இனிப் பதிலடி உண்டு.
ஒப்பரேஷன் சிந்தூர் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. முடிவுறுத்தப்படவில்லை. தேவை ஏற்படின் மீண்டும் தொடரப்படும்.
இவ்வாறு பிரதர் மோடி விமானப் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். இந்தியாவின் துணிவையும் தீரத்தையும் நிலைநாட்டியதாகப் பிரதமர் படையினருக்குப் புகழாரம் சூட்டினார்.
பிரதமரின் உரைக்கு மத்தியில் விமானப் படையினரும் தமது மகிழ்ச்சிப்பெருமிதத்தை வெளிப்படுத்தினர்.
