சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு

சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு: கொட்டாஞ்சேனை மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் கல்வி நிலைய உரிமையாளர் என். சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கும் மாணவியின் தற்கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டுத் தம் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவும் சிவானந்த ராஜா தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரசாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, அவர் உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தா

தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை ஆசிரியர் கட்டாய லீவில்

கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள தொடர் மாடிக்குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி டில்ஷி அம்ஷிகா, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். தம் மகள் அவமானப்படுத்தப்பட்டதால் அந்த முடிவுக்குச் சென்றதாகவும் அவர்கள் கூறினர்.

பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தம் மகளுக்கு, அங்குக் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அந்தச் சம்பவத்தை இந்தச் சிவானந்தராஜா நினைவுபடுத்திக் கேவலப்படுத்தியுள்ளார்.

அதனாலேயே தம் பிள்ளை தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக அம்ஷிகாவின் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை மறுதலித்துள்ள சிவானந்த ராஜா, தனது நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கப்படுவதாகவும் இதற்குப் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிஐடியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, சம்பந்தப்பட்ட பாடசாலையில் தற்போது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாடசாலைக்கு வருகை தர மாணவிகள் பின்வாங்குவதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025