ஜேவிபி கூட்டணிக்கு 265 சபைகள்

ஜேவிபி கூட்டணிக்கு 265 சபைகள் கிடைத்திருப்பதாகப் பிந்திய தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனினும், சில உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைப்பதில் சிக்கலான நிலையும் உருவாகியுள்ளது.
ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஒரு சபையில் கூடுதலான உறுப்பினர்களைப் பெற்றிருப்பினும், அதனைவிட எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூடுதலான உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.
அதேநேரம், கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்கு வீதத்தைவிடவும் இந்தத் தேர்தலில் குறைந்த வாக்கு வீதத்தைப் பெற்றுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் 62 வீத வாக்குகள் கிடைத்திருந்தபோதிலும் இந்தத் தேர்தலில் 43வீத வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளன.
கட்சி- சுயேச்சை | வாக்குகள் | வாக்கு வீதம் | உறுப்பினர்கள் |
தே. மக்கள் சக்தி | 4,503,930 | 43.26% | 3,927 |
ஐ. மக்கள் சக்தி | 2,258,480 | 21.69% | 1,767 |
ஶ்ரீல.பொ.ஜ.பெ | 954,517 | 9.17% | 742 |
ஐ. தே. க | 488,406 | 4.69% | 381 |
பொ. ஜ. ஐ. மு | 387,098 | 3.72% | 300 |
இ. தமிழரசு கட்சி | 307,657 | 2.96% | 377 |
சர்வஜன பலய | 294,681 | 2.83% | 226 |
மு. காங்கிரஸ் | 139,858 | 1.34% | 116 |
ஜ. த. தே. கூட்டணி | 89,177 | 0.86% | 106 |
அ. இ. ம. காங்கிரஸ் | 75,268 | 0.72% | 60 |
ஏனையவர்கள் | 911,738 | 285 |
ஜேவிபி கூட்டணிக்கு 265 சபைகள் கிடைத்திருக்கும் அதேநேரம், இலங்கை தமிழரசுக் கட்சி 35 சபைகளின் அதிகாரத்தைக கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளது.
எனினும், வடக்கில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பதால், தேவையான இடங்களில், அந்தக் கட்சிகளுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 14 சபைகளைக் கைப்பற்றியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய இடங்களில் எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆறு சபைகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு சபைகளையும் கைப்பற்றியுள்ளன.
