பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்

பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மிர் பகுதி மீதான தாக்குதல்
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 1.44 அளவில் பயங்கரவாத நிலைகளை இலக்கு வைத்து, ஒப்பரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள நான்கு நிலைகள் மீதும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மிர் பகுதியில் ஐந்து நிலைகள் மீதும் இந்தியாவின் முப்படையும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தியாவின் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பாகிஸ்தான், இதில் மூவர் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. புதுடில்லியின் போராகவே இதனைக் கருதுவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானுக்கு எதிராக முப்படையையும் இந்தியா களமிறக்கியுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் திகதி காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.
எனினும், இராணுவ நிலைகளோ பொதுமக்களோ இலக்கு வைக்கப்படவில்லை என்று இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டிருக்கும் லஷ்கர்-இ தொய்பா உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையகக் கட்டடங்களையே இலக்கு வைத்ததாக இராணுவம் கூறியுள்ளது.
எவ்வாறெனினும், இந்தியாவின் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் பதிலடியாக. காஷ்மிரின் எல்லைக் கோட்டுப் பகுதி முழுவதுமீதும் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கான அனைத்து விமான சேவைகளையும் இந்தியா இரத்துச் செய்துள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துவதை பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் அவதானித்துள்ளார். இன்று முற்பகல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு விளக்கம்
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போர் தொடக்கம் குறித்து அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம் முதலான நாடுகளுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் தொலைபேசியில் உரையாடியிருப்பதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய-பாகிஸ்தான் நிலவரத்தை அவதானித்துக்கொண்டிருப்பதாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை விரைவில் முடிந்துவிடும் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை
போர் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று இந்தியா முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெறுகின்றன. அனைத்து மாநிலங்களிலும் போர் பாதுகாப்பு ஒத்திகையை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
