மாணவி தற்கொலை குறித்து அரசாங்கம் அறிக்கை

1690187652-LG-bodies-6

மாணவி தற்கொலை குறித்து அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மகளிர் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிககையில், கொட்டாஞ்சேனை பகுதி மாணவியின் தற்கொலைச் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய பாடசாலை ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் 16 வயது மாணவி தனது குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், மகளிர் விவகார அமைச்சின் கீழுள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக அவரது தாயார் கடந்த டிசம்பர் மாதம் எட்டாந்திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் பிரகாரம் சந்தேக நபருக்கு எதிராகப் பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளனர்..

சந்தேக நபருக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதிமன்றம் சரீரப் பிணையில் அவரை விடுவித்திருக்கிறது.

இறக்கும்போது மாணவி நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றும் வந்திருக்கிறார். மாணவி தற்கொலை குறித்து அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருப்பதைப் பிழையின்றிப் பகிரங்கப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு பொலிஸ் சிறுவர், மகளிர் பிரிவுடன் இணைந்து தமது அமைச்சின் கீழ் உள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இதுவரை முறைப்பாடு பதிவுசெய்யப்படவில்லை. அதனால், முறைப்பாடொன்றைப் பெறுவதற்காக இன்று (06) மாணவியின் உறவினர்களை அழைத்திருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாணவியைப் பாதிப்புக்கு உள்ளாக்கிய ஆசிரியர் தேசிய பாடசாலையொன்றில் பணியாற்றுபவர் என்பதால், அதுபற்றிக் கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை யாதென்பதை எழுத்து மூலம் கோரியிருப்பதாகவும் மகளிர் விவகார அமைச்சு தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

  • ஜீவிதன்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025