மலைவாழ் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

மலைவாழ் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு: இன்றைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மலைவாழ் (மலையக) மக்கள் இன்று காலை முதல் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக மலையகத்தைப் பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 6,10,117. இதில் 18,342 பேர் அஞ்சல் வாக்காளர்களாவர்.
நுவரெலியா மாவட்டத்தில் 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக 6,352 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் போக்குவரத்துக்காக அரச, தனியார் வாகனங்கள் அடங்கலாக 672 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மலைவாழ் மக்களின் தலைவர்கள் வாக்களிப்பு
மலைவாழ் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு செய்துவரும் நிலையில், அந்த மக்களின் தலைவர்களும் உற்சாகத்துடன் வாக்களித்தனர்.

ஜீவன் தொண்டமான் எம்பி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கை கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலய வாக்குச் சாவடியில் செலுத்தினார்.

வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்பி
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தனது வாக்கை நுவரெலியா நல்லாயன் மகளிர் கல்லூரி வாக்குச் சாவடியில் செலுத்தினார்.

கிருட்டினன் கலைச்செல்வி எம்பி
தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தனது வாக்கை ஹட்டனில் உள்ள ஸ்ரீபாத சிங்கள வித்தியாலய வாக்குச் சாவடியில் அளித்தார்.

க. கிருஷாந்தன்
