தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

தப்பியோடும் இளைஞர்மீது துரத்தித் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவமொன்று இன்று காலை கல்கிஸை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்தப் 19 வயது நிரம்பிய இளைஞர் மீது கல்கிஸை, கடற்கரை வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காயமடைந்த அவர், பிரதான வீதியூடாக ஓடியுள்ளார்.

ஓடி மூச்சுவாங்கி நின்ற அந்த இளைஞரைப் பின்னால் துரத்திச் சென்ற ஒருவர் மீண்டும் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தனது சகாவின் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் செல்கிறார்.

சூடுபட்ட இளைஞர் உடனடியாகக் கொழும்பு தெற்கு (களுபோவிலை) போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துவிட்டார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமான இளைஞர் நகர சபை ஊழியர் என்று தெரியவந்துள்ளது. எனினும், அவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை.

கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்திப்பில் ஒரு கிளை வீதியில் அவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியமை சி.சி.டி.வி, கெமராவில் பதிவாகியிருந்தது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் பிரதான வீதியை நோக்கி ஓடுவதையும், அங்கு சந்தேக நபர்கள் இருவர் மீண்டும் அவரைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற விதமும் மற்றொரு சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

தப்பியோடும் இளைஞர்மீது துரத்தித் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் தெஹிவளை, ஓபன் பிளேஸைச் சேர்ந்த அந்த இளைஞனின் கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

அவரது தாயார் தற்போது போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். இறந்த இளைஞன் 2023ஆம் ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்கவின் உறவினர் என்று கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாணத்தின் தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.