எம்மிடம் குறுக்கு வழிகள் இல்லை!

எம்மிடம் குறுக்கு வழிகள் இல்லை! கடுமையான யதார்த்தத்தை புதிய பாதைக்கு மாற்றுவதில் மிகவும் முறையான திட்டமிடப்பட்ட முயற்சியே உண்டென்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புதல், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்ற சவாலை நாம் நிச்சயமாக வெற்றிகொள்வோம்.

• சவால்களை எதிர்கொள்வதில் ஒரே நோக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் பாரம்பரியம் எம்மிடம் உள்ளது.

• நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியை வெற்றிக்கொள்ள தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

இவ்வாறு நேற்று நடைபெற்ற தொழிலாளர் நாள் கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு காலி முகத்திடலில் பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:

எம்மிடம் குறுக்கு வழிகள் இல்லை! அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுக்காக அர்ப்பணித்து அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப் பாரிய சவாலை வெற்றிகொண்டோம்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற சவாலை நிச்சயமாக எமது இயக்கம் வெல்லும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நாட்டைக் கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டுசெல்லத் தயாராக இருக்கும் ஓர் இயக்கத்தால் இன்று நாடு ஆளப்படுகிறது.

அதன்போது, இந்த நாட்டின் தொழிற்சங்க இயக்கமும் தனது பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை அணிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை வெற்றியடையச் செய்ய அரசாங்கத்துடன் கைகோக்குமாறு அனைத்துத் தொழிற்சங்க இயக்கங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

” நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் மே தினக் கூட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மக்கள் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று செயற்படும் ஒரே அரசியல் இயக்கமாக இருப்பது தேசிய மக்கள் சக்தி என்றும், இந்த நாட்டின் எதிர்காலமும் மக்களின் எதிர்காலமும் முழுமையாக தேசிய மக்கள் சக்தியின் கைகளில் உள்ளது.

இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“நாங்கள் நீண்ட காலமாக மே தினத்தை கொண்டாடியிருக்கிறோம். அப்போது அதிகாரத்தை கைப்பற்ற மக்களை திரட்டுவதே நோக்கமாக இருந்தது.

இன்று முதல் முறையாக அதிகாரத்தை கைபற்றி நாட்டை கட்டியெழுப்புவதற்கான கூட்டத்தை நடத்துகிறோம்.

இன்று தேசிய மக்கள் சக்தி மட்டுமே அரசியல் கட்சியாக உள்ளது. இந்நாட்டின் எதிர்காலமும் மக்களின் எதிர்காலமும் தேசிய மக்கள் சக்தியின் கைகளிலேயே உள்ளது.

மற்றைய எதுவும் அரசியல் கட்சி அன்று. அவை இடிபாடுகள் மட்டுமே. ஆனால் சில குரல்கள் கேட்கின்றன.. அவற்றில் என்ன தெரிகிறது?

நீண்ட காலம் அவர்கள் நாட்டை ஆண்டனர். அத்தோடு நின்றுவிடாமல் அதிகாரத்தை தமது தலைமுறையினர் மீது மாட்டியிருந்தனர்.

மகன், தம்பி,தந்தை, மகன்,மருமகன் என்ற வகையில் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது. தந்தை, தாய்,மகள் என்ற வகையில் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது.

மாமன் மருமகன் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் நீண்டகாலமாக அவர்களின் தலைமுறையினர் கைகளில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டனர்.

எமது நாட்டு மக்களை நெருக்கடிக்கும் அநீதிக்கும் உட்படுத்தி அதிகாரத்தை கொண்டுச் செல்ல முடியுமென நினைத்திருந்தனர்.

ஆனால் கடந்த செப்டம்பர் 21 இந்நாட்டு மக்கள் மிகத் துணிச்சலாக தீர்மானமொன்றை எடுத்தனர்.

அந்தத் தீர்மானத்தின் ஊடாக பல தலைமுறைகளுக்கு அதிகார வரைவை மாட்டிக்கொண்டிருந்தவர்களின் கைகளிலிருந்து மக்களின் கைகளுக்கு ஆட்சி மாற்றிக்கொள்ளப்பட்டது.

அந்த அதிகார இழப்பு மற்றும் எதிர்பார்ப்புக்களை இழந்ததன் அவலக் குரலை எமக்கு கேட்கிறது.

மறுதிசையில் அவர்கள் அதிகாரத்தில் இருந்த வேளையில் மக்கள் பணத்தை விரயம் செய்து, மிகுந்த வரப்பிரசாதங்களுடன் கூடிய வாழ்வைக் கழித்தனர். பொது சட்டங்களுக்கு அடிபணியாமல் வாழ்ந்தனர்.

பொதுமக்களுக்கு மேலாக அதிகார பராக்கிரமத்தை கட்டமைத்துக்கொண்டு மக்களுக்கு மேலிருக்கும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தினர். இன்று என்ன நடந்திருக்கிறது?

பொதுச் சட்டத்துக்கு பணிந்துள்ளனர். வரப்பிரசாதங்களை இழந்துள்ளனர். சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதனால் அவர்களுக்கு இப்போது கவலை வந்திருக்கிறது. அதனால் தான் எதிர்த்திசையில் வேதனையின் அவலக்குரல் கேட்கிறது.

இன்னொரு பக்கத்தில் அவர்கள் செய்த குற்றங்களின் அளவை எங்களை விடவும் அவர்களே அறிவார்கள். அவர்கள் செய்த ஊழல்களையும் எங்களை விட நன்றாக அறிவர்.

அவர்கள் ஊழல், மோசடி, குற்றங்களின் ஈடுபட்ட விதத்தை அறிவார்கள். அதனை போலவே நாம் யார் என்பதையும் அறிவார்கள். நினைவில் கொள்ளுங்கள்!

அவர்களின் குற்றங்களை அறிந்திருக்கும் அளவிற்கு நாங்கள் யார் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

அதனால் பீதியின் அவலக் குரல் கேட்கிறது. அதனால் அரசியலின் மறுமுனையில் இன்று என்ன இருக்கிறது?

எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாததன் வேதனை. வரப்பிரசாதங்களை இழந்திருப்பதன் அவலக்குரல். பீதியில் அல்லாடுகிறார்கள்.

அதனால் வேறு அரசியல் கட்சிகள் இல்லை. அவர்கள் பொதுவௌியில் வெட்டித்தனமாக பாடித்திரியும் குழுக்களாக மாறியுள்ளனர்.

மார்ச்சில் அரசாங்கம் சரியும் என்று சொல்கிறார்கள். மார்ச் மாதம் முடிந்தவுடன் ஓகஸ்ட் என்று சொல்கிறார்கள். ஓகஸ்ட் வரும் முன்பாக அடுத்த ஏப்ரல் வரை ஒத்திவைக்கிறார்கள்.

பின்னர் அடுத்தவர் டிசம்பரில் வருவதாக சொல்கிறார். அவை வெட்டித்தனமான பாடல்கள். அந்த பக்கத்தில் அரசியல் கட்சிகள் இல்லை. தூரநோக்கம் இல்லை. ஒருங்கிணைக்கும் இயலுமை இல்லை.

செய்வது என்னவென்று தெரியவில்லை. அங்குமிங்கும் சிதறிய தொகுதிகளின் கூட்டிணைவு காணப்படுகிறது.

அவை அரசியல் கட்சியல்ல.அதனால் எங்களுக்கு வௌியில் எங்களுக்கு சவாலொன்று இல்லை என்பதை நாங்கள் அறிவோம் ” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

வைர வர்த்தகர் பெல்ஜியத்தில் கைது

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025