இன்று சர்வதேச தொழிலாளர் நாள்

இன்று சர்வதேச தொழிலாளர் நாள்

கோப்புப் படம்

இன்று சர்வதேச தொழிலாளர் நாள்: சர்வதேச தொழிலாளர் நாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் மே முதல் நாள் தொழிலாளர்களின் தியாகத்தையும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் பற்றியும் நினைவு கூரப்படுகிறது.

தொழிலாளர் நாளையொட்டி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தம் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இன்று சர்வதேச தொழிலாளர் நாள்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள், சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.

ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

“வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வாழ்த்துச் செய்தி

வளமான நாடும் அழகான வாழ்க்கையும்
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

அரச, தனியார், தொழில்முயற்சியாளர்கள், தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார சக்திகளையும் வலுப்படுத்த அரசாங்கம் ஒரு முறையான வேலைத்திட்டத்தைத் தயாரித்துள்ளது.

நாட்டை தன்னிறைவு பெறச் செய்வதில் முன்னணியில் இருக்கும் விவசாய சமூகத்தை வலுப்படுத்தவும் தயாராக உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் நாள் வரலாறு

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்சங்கங்களும், சோசலிசக் குழுக்களும் தொழிலாள வர்க்க மக்களுக்கு ஆதரவான நாளாக மே 1-ஐ அறிவித்தன..

1886-ஆம் ஆண்டில் மே முதல் நாள் அமெரிக்காவின் பிற நகரங்களில் நடைபெற்றது போலவே சிகாகோ நகரிலும் எட்டு மணி நேர வேலை நாள் கோரி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது.

இதனை அடுத்து போராடிய தொழிலாளர்கள் மீது பொலிஸார் அடக்குமுறையைப் பிரயோகித்ததால் வன்முறை வெடித்தது. சில தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதனைக் கண்டித்து சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதனைக் கலைக்க வந்த பொலிஸார் மீது குண்டு ஒன்று வீசப்பட்டது.

இதனையடுத்து தொழிலாளர் மீதான அடக்குமுறை தீவிரமானது. இறுதியில், வன்முறை முடிவதற்குள் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்.

நான்கு முதல் எட்டுப் பொதுமக்கள் இறந்ததாகவும், 30 முதல் 40 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையிலேயே ‘உழைப்பாளர் நாள்’ மே 1-ஆம் திகதி அனுட்டிக்கப்படுகிறது.

பிரதான அரசியல் கட்சிகளின் மே நாள் கூட்டங்கள், பேரணிகள்

இன்று சர்வதேச தொழிலாளர் நாள் என்பதால் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தமது கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்துகின்றன.

தேசிய மக்கள் சக்தி தனது மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், “நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணி திரளும் என்ற தொனிப்பொருளில் இந்த மே தினக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் மே தினக் கூட்டம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தலவாக்கலை லிந்துலை நகரசபை மைதானத்தில் நடைபெறுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெறும்.

கொழும்பில் 15 இடங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெறும் மே தின கூட்டங்கள், பேரணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அந்தப் பகுதிகளைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் செல்லுமாறு பொலிஸார் சாரதிககளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025