இந்தியாவின் இராணுவ நடவடிக்கை விரைவில்

இந்தியாவின் இராணுவ நடவடிக்கை விரைவில் தொடங்கப்படலாம் என்று உளவுத்துறைத் தகவல்களை ஆதாரம் காட்டி பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
காஷ்மிர் பகல்ஹாம் சுற்றுலாத்தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியிருக்கும் இந்தியா, துரிதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் பாகிஸ்தான் துணைபுரிவதாக இந்தியா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டை நிராகரிக்காமல், அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதைப்போல் பாகிஸ்தானும் பரஸ்பர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
எனினும், பகல்ஹாம் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு இந்தியாவைச் சாந்தப்படுத்துவதாகத் தெரியவில்லை.
பாகிஸ்தான் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தும் அதிகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கியிருக்கிறார். இதனால், பாக்-இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தனது மக்களைத் திசைதிருப்பும் விதமாகப் போலியான போர்ப் பயிற்சி காட்சிகளை வரைகலை (கிராபிக்ஸ்) மூலம் தயாரித்து பாகிஸ்தான் வெளியிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள், இந்தியா மீது போர் தொடுப்பதை விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுமை காக்குமாறு அமெரிக்கா வேண்டுகோள்!

இந்தியாவின் இராணுவ நடவடிக்கை விரைவில் தொடங்கப்படலாம் என்று பாகிஸ்தான் அறிவித்திருக்கும சூழலில், பொறுமையுடன் செயற்படுமாறு இரு நாடுகளையும் கேட்டுக்கொள்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுமையுடன் நடந்துகொண்டு பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநேரம், இந்தியா ஆத்திரமடைவதற்குக் காரணமான பகல்ஹாம் தாக்குதலைப் பாகிஸ்தான் கண்டிக்க வேண்டும் என்றும் மார்கோ ரூபியோ கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜீவிதன்