இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 17பேர் பலி

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 17பேர் பலியாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வடக்கு காசாவின் ஜபாலியா நிர்வாகம் கூறியதாவது, ஜனவரி மாதத்திலிருந்து உதவிக்கரம் நீட்டிவரும் எகிப்து, கத்தார் நாடுகள் கொடுத்த புல்டோசர்கள், வாகனங்கள் நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இஸ்ரேல் அதனைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்தம் முடிவடைந்தது. தற்போது காசாவில் மீண்டும் தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதனால், உணவு, மருந்துப் பொருள்கள், எரிபொருள் என அனைத்துவிதமான இறக்குமதிகளும் சீர்குலைந்துள்ளன. தண்ணீர் தொட்டிகள் மற்றும் செல்போன் கோபுரங்களைக் குறிவைத்தும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.