செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால்?

செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால்? என்னவாகும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
செப்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது நம் முன்னோர்கள் நமக்கு அறிமுகப்படுத்திய பல நல்வாழ்வுப் பழக்கங்களில் ஒன்றாகும்.
செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிக்கும் பாரம்பரிய நடைமுறை, உடல்நலத்திற்கு பல நன்மைகளைத் தரும் என நம்பப்படுகிறது.
காலை எழுந்தவுடன் முதல் வேலையாகத் தண்ணீர் குடிப்பது நல்லது.
செம்பு எனப்படும் தாமிரச் சத்து, ரத்த விருத்திக்குத் தேவையான அடிப்படை தாது உப்பு. செப்புப் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைக்கும்போது, செம்பு என்ற தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்லக் கலக்கும்.
பின்னர் அந்நீரைக் குடித்தால் அல்லது சமையலில் பயன்படுத்தி உட்கொண்டால் தாமிரம் உடலுக்குள் சென்று உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இரவில் செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனைக் காலையில் குடிக்கும்போது விரைவாக உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும் எனவும், நல்ல உடல் வலிமையுடன் அந்த நாளைத் தொடங்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் என்ன நன்மைகள் உண்டோ அதேயளவு செடிகளுக்கும் நன்மை பயக்கும் அதுதான் செப்புப் பாத்திரத்தை விளக்கி, செடிக்கு அடியிலே ஊற்று’ என்கிறது பழமொழி.
செப்புப் பாத்திரம் கழுவிய நீரைச் செடிகளுக்கு ஊற்றினால் அவை நன்கு வளர்ந்து, அந்தக் காய்கறிகள் சத்துகள் நிறைந்தவையாக இருக்கும் என்பதே இதன் பொருளாகும். அக்காய்கறிகளை நாம் உண்ணும்போது நம் உடலுக்கும் மிகுந்த நன்மைகள் விளையும்.
அதுமட்டுமல்லாமல், செம்பு நல்ல ரத்த அணுக்களைத் தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. எனவே, செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது ரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்பட்டு, ரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதன் அபாயம் குறைகிறது என்று நம்பப்படுகிறது.
செம்பு கலந்த நீர் செரிமானத்தையும் மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது. தாமிரம் வயிற்று தசைகளைத் தூண்டும் சக்தி கொண்டது என்பதால் இது செரிமானத்தைச் சீராக்க உதவுகிறது.
மேலும், தாமிரம் உடலில் நச்சுத்தன்மையை நீக்கி உணவிலிருக்கும் ஊட்டச்சத்துகளைச் சிறப்பாக உறிஞ்சும் தன்மையைக் கொண்டுள்ளது.
செம்பு கலந்த நீரை அருந்தும்போது, நலமிக்க, பொலிவான சருமத்தைப் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. ஏனெனில் தாமிரம், ‘கொலாஜன்’, ‘எலாஸ்டின்’ போன்ற புரதங்களின் உற்பத்தியைத் தூண்ட உதவும்.
இத்தனை நன்மைகளைக் கொண்டிருக்கும் இந்த நடைமுறையை அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுவது இயற்கையாகவே உடல்நலம் பேண உதவும்.
யோகிதா அன்புச்செழியன் – தமிழ்முரசு
விசுவாசுவ தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு
