தென்னக்கோனைப் பதவி நீக்க குழு

தென்னக்கோனைப் பதவி நீக்க குழு: பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ள தேசபந்து தென்னக்கோனைப் பதவி நீக்குவது பற்றி ஆராய குழுவொன்றை நியமிப்பதற்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இதுபற்றிய தீர்மானத்திற்கு இன்று சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஆதரவாக 151 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.
பொலிஸ் மாஅதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் 115 பேரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் 25ஆம் திகதி பாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
இந்தப் பிரேரணை செல்லுபடியாகாது என்று முன்னாள் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருந்தார்.
அதாவது, பதவியில் இல்லாத ஒருவரை நீக்குவதற்கு எப்படி பிரேரணை கொண்டுவர முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
தென்னக்கோனைப் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த நிலையில், பதவியில் இல்லாத ஒருவரை நீக்குவதற்குப் பிரேரணை கொண்டு வர முடியாது என்று திரு. ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
எனினும், பாராளுமன்றம் இன்று குழுவொன்றை நியமிக்கும் பிரேரணைக்கு வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறது.
மூன்று மாதம் தடுத்துவைக்கப்பட்டவர் மூன்று வாரத்தில் விடுவிப்பு
