பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (05) காலை உத்தியோகபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

இராணுவ அணிவகுப்பு, பீரங்கி வேட்டுகள், செங்கம்பள வரவேற்பு எனப் பிரதமர் மோடி வரவேற்கப்பட்டார்.

வரவேற்பு விழாவில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அமைச்சர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தியப் பிரதமருடன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

மித்திர விபூஷண் விருது

இலங்கை – இந்திய நட்புறவின் அடையாளமாகப் பிரதமர் மோடிக்கு இலங்கை அரசின் உயர் விருதான மித்திர விபூஷண் விருது வழங்கப்பட்டது. நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட விருது பதக்கத்தை ஜனாதிபதி அணிவித்தார்.

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டமை குறித்து நன்றி தெரிவித்த அவர், இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் மித்ர விபூஷண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என்றார்.

தனக்கு மாத்திரமன்றி, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த விருது என்றும் அது குறித்து ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இன்று (05) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இந்தியாவும் இலங்கையும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவையும் ஆழமான நட்பையும் கொண்டிருப்பதாகவும், 2019 ஆம் ஆண்டில் மேற்கொண்ட விஜயம் மிகவும் உணர்ச்சிகரமான நேரத்தில் இடம்பெற்றது என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர், பிரதமராகப் பதவியேற்ற பிறகு இது இலங்கைக்கு தாம் மேற்கொண்ட 04 வது பயணம் என்றும் தெரிவித்தார்.

மக்களின் துணிச்சல் மற்றும் தைரியம் பற்றி தாம் அறிந்திருப்பதால், இலங்கை வலுவாக மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று தான் நம்புவதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கை முன்னேற்றப் பாதைக்குத் திரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.

கொளரவமான நண்பராக இந்தியா தனது கடமையை நிறைவேற்றுவது பெருமைக்குரிய விடயம் என்றும், 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், கொவிட் நோய்த்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அனைத்து சூழ்நிலைகளிலும் தனது அரசாங்கம் இலங்கை மக்களுடன் இணைந்து நின்றுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

“திருவள்ளுவரின்” திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, உண்மையான நண்பனையும் அவனது நட்பையும் தவிர வேறு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்பின் பிரதிபலிப்பாகும் என்றும், இலங்கை ஜனாதிபதியை தனது முதல் வெளிநாட்டு நண்பராகப் பெறும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், மஹாசாகர் நோக்கிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உள்ளதாகவும் கூறிய பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் முதல் திருகோணமலையை வலுசக்தி மையமாக நிறுவுவது வரை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் நன்மைகள் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் இந்தியப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

உயர் மின்னழுத்த மின் இணைப்பு தொடர்பான ஒத்துழைப்பு இலங்கைக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்றும், இலங்கையில் உள்ள மதத் தலங்களில் 5,000 சூரிய மின் கலங்களை நிறுவுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும், மக்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக இலங்கைக்கு 2.4 பில்லியன் ரூபாய் அன்பளிப்பு வழங்கயிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நன்மைக்காக இலங்கையின் மிகப்பெரிய விவசாய களஞ்சியக் கட்டடத்தொகுதியை நிர்மாணிக்க இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டினார்.

நவீனமயமாக்கப்பட்ட மஹவ-ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ-அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் வைபவத்தில் பங்கேற்கவுள்ளதாகவும், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கும், இலங்கையின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 700 இளம் தலைவர்களுக்கு நல்லாட்சி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளுக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் “சப்கா சாத் சப்கா விகாஸ்” நோக்குக்கு அமைய, அயல் நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அதன்படி, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பின் போது வட்டி விகிதங்களைக் குறைக்க தீர்மானித்திருப்பதாகவும், அதனூடாக இலங்கை மக்களுக்கு சலுகை மற்றும் வழி கிடைக்கும் என்றும் இந்தியப் பிரதமர் கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பல நூற்றாண்டுகளாக ஆன்மிக மற்றும் உணர்வுபூர்வமான உறவு இருப்பதாகவும், அதை உறுதிப்படுத்தும் வகையில், 1960ஆம் ஆண்டு குஜராத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்களை தரிசிக்க எதிர்பார்ப்பதோடு அதனை இலங்கைக்கு வழிபாட்டுக்காக கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

திருகோணமலை திருக்கோணேஸ்வரம், அனுராதபுரம் புனித நகரம், சீதாஎலிய கோவில் போன்ற சமய வழிபாட்டுத் தலங்களின் மறுசீரமைப்பிற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

இலங்கைக்கான தனது அரச விஜயத்தின் போது உயர் அரச கௌரவத்துடன் வரவேற்றமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் இலங்கை வந்தார்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025